Puducherry Wine Bottels kidnapping in bus: 5 women detained in Namakkal; Seizure of wine bottles
நாமக்கல் : அரசு பஸ்சில் பாண்டிச்சேரி மதுபாட்டில்களை கடந்தி வந்த 5 பெண்களை நாமக்கல்லில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 203 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் பகுதியில் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு ஏடிஎஸ்பி செந்தில் தலைமையில் நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கடந்த 22ம் தேதி வளையப்பட்டி பஸ்ஸ்டாப்பில் மதுவிலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குமாரபாளையம் கலைவாணி தெருவை சேர்ந்த ஜோதிமணியின் மனைவி மணி (50), குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி சாந்தி (49) ஆகியோர் திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் அரசு பஸ்சில் 40 பாண்டிச்சேரி புல் பிராந்தி பாட்டில்களை கடத்திச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் ராசிபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டகலூர் கேட் பஸ்ஸ்டாப்பில் மதுவிலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது குமாரபாளையம் காவேரி நகர் பச்சமுத்து மனைவி தெய்வானை (60), குமாரபாளையம் பிராந்தர்காடு பகுதியை சேர்ந்த செங்கோடன் மனைவி ஈஸ்வரி (58), குமாரபாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த அமாவாசை மனைவி மல்லிகா (எ) பழனியம்மாள் ஆகியோர் ஆத்தூரிலிருந்து ஈரோடு செல்லும் அரசு பஸ்சில் சுமார் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 163 பாண்டிச்சேரி மதுபான பட்டில்களை (மொத்தம் 203 பாட்டில்கள்) சட்ட விரோதமாக கடத்திவந்து குமாரபாளையம் பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கண்ட 5 பேரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை கைப்பற்றி நாமக்கல் மதுவிலக்குப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை கோர்ட் காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை கடத்தி வந்த பெண்களை கைது செய்து பாட்டில்களை கைப்பற்றிய மதுவிலக்கு ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு பாராட்டினார்.