Rabies Awareness and Vaccination Camp: Inaugurated by Collector Venkatabriya at Perambalur!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் வெறி நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமினை கலெக்டர் வெங்கடபிரியா பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும், பிராணிகள் நலம் பேணுதல் மற்றும் வெறி நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர் நகராட்சி உள்ளிட்ட அனைத்து பேரூராட்சிகள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மாவட்டம் முழுவதும் சுமார் 1,590 தெரு நாய்களுக்கு இலவசமாக வெறி நோய் தடுப்பூசி செலுத்திட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
வெறி நோய் மனிதர்கள் மற்றும் விலங்குகளில் மூளை அலர்ஜியை உருவாக்கும் ஒரு கடுமையான நோயாகும். இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டாலே இறப்பு ஏற்பட்டு விடும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாய்கள் மற்றும் விலங்குகள் மனிதனை கடிக்கும் பொழுது அதன் உமிழ்நீர் வழியாகவோ அல்லது உடலில் உள்ள காயங்களில் உமிழ்நீர் படுவதன் மூலமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் வெறிநோய் 97% நாய்களின் மூலமாகவும் 2 சதம் பூனைகளின் மூலமாக பரவுகிறது. அனைத்து விதமான நாய் மற்றும் பூனைகளுக்கும் வெறி நோய் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த நோயை முற்றிலுமாக வராமல் தடுக்கலாம். நமது செல்லப் பிராணியான நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடுதல் மிகவும் முக்கியமானதாகும். முதல் தடுப்பூசியானது ஆறாவது வார வயதிலும் இரண்டாவது தடுப்பூசியானது எட்டாவது வார வயதிலும் அனைத்து விதமான நாய் மற்றும் பூனைகளுக்கு செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த நோய் உருவாக்குவதையே முற்றிலுமாக தடுக்கலாம்.
முன்னதாக, பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளை கால்நடைகள் உண்பதால் கால்நடைகளின் இரைப்பையில் அடைத்துக் கொண்டு கால்நடைகளின் நலம் பெரிதும் பாதிக்கப்படுவதால், ‘பிராணிகள் நலம் காத்திட நெகிழிப்பை தவிர்ப்போம்’ என்னும் கருத்தை முன்னிறுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற கால்நடைகளுக்கான தீவனங்கள் மற்றும் இதர பயன்பாட்டிற்காக பிளாஸ்டிக் பைகளில் வாங்காமல் மஞ்சப்பைகளை உபயோகப்படுத்தி வேண்டும் எனவும், கால்நடைகளை தெருக்களில் மேய விடாமல் வயல்வெளிகளில் மேய்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மஞ்சப்பைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், துணை இயக்குநர் குணசேகரன், பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் ராதா (பொ), கால்நடை மருத்துவர்கள் ஜவஹர்,முத்துச்செல்வம், தீபா, செல்வம், உதவியாளர் ரமேஷ், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.