Read books daily; Nandalala speaks at Perambalur training class!
பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கான அறிவோம் மார்க்சியம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும் மக்களுக்கான மருத்துவ கழகத்தின் மாநில செயலருமான டாக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நந்தலாலா கலந்து கொண்டு, ஏன் எதை எப்படி படிக்க வேண்டும் என்ற தலைப்பில் பேசியதாவது, தினசரி புத்தகங்களை படியுங்கள் செல்போனில் உங்கள் நேரங்களை வீணடிக்காதீர்கள். என்றைக்காவது என் இளைஞர்களுக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தால், அவன் ஒரு நாளும் தவறு செய்யமாட்டான். பொறுப்பைக் கொடுக்காத சமூகம் குற்றவாளியே தவிர, இளைஞன் ஒரு நாளும் குற்றவாளி இல்லை என்பதை உணர வேண்டும்.
தமிழர்கள் இலக்கியத்தை உள்வாங்க வேண்டும். வெளிப்பாட்டு முறையில் உலகத்தோடு போட்டி போட வேண்டும். மைக்கேல் ஹெச் ஹன்ட் என்ற அமெரிக்கர், தி ஹண்ட்ரட் (நூறு பேர்) என்ற பெயரில் எழுதி, மணவை முஸ்தபா மொழிபெயர்ப்பு செய்த நூலில், உலகத்தில் செல்வாக்கு செலுத்திய, மாற்றியமைத்த நூறு பேரை பட்டியல் இட்டார். இந்த நூலில் இரண்டாம் இடம் பெற்ற ஐசக் நியூட்டன் உள்ளிட்ட 36 பேர் அறிவியலாளர்கள். இதில் எத்தனை பேர் இந்தியர்கள். ஒருவர் கூட இதில் இந்தியர் எவரும் இல்லை என்பது சிந்திக்க வேண்டிய, கவலைக்குரிய விஷயம்.
ஏழையாக எவரும் பிறப்பது பாவமில்லை. தவறுமில்லை. ஆனால் இறக்கும் போது ஏழையாக இறக்காதே. இதற்கு ஒரே வழி படிக்கிற கல்வியை மனசுத்தத்தோடும், நமக்கானது என்றும் படிக்க வேண்டும். ஏன் இந்தியாவில் விஞ்ஞானிகள் வரவில்லை ? இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று தெரியுமா? இந்திய மரபில் இருக்கின்ற ஆகப்பெரிய சிக்கல்… குடும்பம் தொடங்கி, சமூகம் தொடங்கி, சாதி தொடங்கி, கடவுள் தொடங்கி, அனைத்துமே, சிந்திக்காதே என்று சொல்வதுதான். இந்தியாவில் விஞ்ஞானிகள் உருவாகாமல் போனதற்கு காரணம் என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியர் குமணன் தொகுத்து வழங்கினார். முடிவில் சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் நன்றி கூறினார்.
துறை தாமோதரனின் மந்திரமா தந்திரமா அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பண்பாட்டுத் தளத்தில் நாம் என்ற தலைப்பில் பேசினார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் அகவி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக பேராசிரியர் பாஸ்கர் வரவேற்றார். முதுகலை தமிழாசிரியர் வேல்முருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்திய மாணவர் சங்கம் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.