Regarding the security of schools, the Tamil Nadu Teachers’ Selection Committee inspected various schools in the Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு உத்தரவின்படி நேற்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலமாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கடைபிடிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய தலைவர் எல்.நிர்மல்ராஜ், கலெக்டர் வெங்கடபிரியா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், மாணவ,மாணவிகள் பொது தேர்வினை எதிர்கொள்ளும் பொருட்டும் பள்ளிகள் திறக்க உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147 பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் 8,441 மாணவ,மாணவிகளில் 5,963 (70.64 சதவீதமும்) மாணவ,மாணவிகள் வருகை புரிந்துள்ளனர். மற்றும் 12ஆம் வகுப்பில் 7,966 மாணவ,மாணவிகளில் 5,471 (68.7 சதவீதமும்) மாணவி,மாணவிகள் வருகை புரிந்துள்ளனர்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு பாடங்களை முழுவதுமாக கற்பித்திட வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படவுள்ளன. இணையவழி கற்பித்தல் முறையும் தொடரும். பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ இசைவு கடிதத்துடன் வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் வீட்டிலிருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பள்ளிகள் திறப்பதற்கு முன்பு 1 சதவீதம் ஹைப்போக் குளோரைடு கலந்த கரைசல் தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பறைகளிலும் சுகாதார துறையினர் மூலம் வழங்கப்படும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வைக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவும், உடல்வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமிநாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் போன்றவைகள் இருப்பில் வைக்கப்ட்டுள்ளன. கழிப்பறைகளை தினந்தோறும் சுத்தம் செய்யப்பட்டு மிக நேர்த்தியாக பராமரித்திடவும், வகுப்பறைகளில் இருக்கைகளுக்கிடைய 6 அடி இடைவெளியினை தொடர்ந்து பராமரித்திட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு மாணவருக்கு 10 வைட்டமின் மாத்திரைகள், 10 துத்தநாக மாத்திரைகள் வீதம் 2,66,770 மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ,மாணவிகள் ஒவ்வொருவருக்கும் மறுமுறை பயன்படுத்தக்கூடிய 3 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் தூய்மை செய்யப்பட்டு பள்ளிக்கு செல்லும் சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர; நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர; மற்றும் சிறுபான்மையினர; நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகள் மற்றும் வளாகங்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியன கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மாணவ,மாணவிகள் சீருடை, அடையாள அட்டை அல்லது இலவச பேருந்து பயண அட்டை ஏதேனும் ஒன்றை பேருந்துகளில் காண்பித்து பள்ளிக்கு தங்கு தடையின்றி சென்று வரலாம். பள்ளிகளில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சத்துணவு மையங்களின் மூலம் வழங்கப்படும் உணவு பாதுகாப்பான முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் க.மதிவாணன், வட்டாட்சியர்கள் அருளானந்தம், சின்னதுரை, பாலசுப்ரமணியம், பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் குமரிமண்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி, செந்தில், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!