பெண்களுக்கான கபடி போட்டியில் முதலிடம் பெற்ற அணியினருக்கு சான்றிதழ் அளிக்கிறார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி. உடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராம. சுப்பிரமணியராஜா உள்ளிட்டோர்.
பெரம்பலூரில் முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரர், வீராங்களைகளுக்கு சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி திங்கள்கிழமை பரிசு வழங்கி பாராட்டினார்.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான திருச்சிராப்பள்ளி மண்டல அளவிலான கபடி போட்டிகள் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
இப்போட்டிகளில், திருச்சி, திருவாரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர் தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் 192 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில், ஆண்களுக்கான போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டம் முதலிடத்தையும், திருச்சி மாவட்டம் 2 ஆம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 3 ஆம் இடத்தையும் பெற்றது.
பெண்களுக்கான போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் 2 ஆம் இடத்தையும், திருச்சி மாவட்டம் 3 ஆம் இடத்தையும் பெற்றது.
தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம், அணிக்கு ரூ. 60 ஆயிரமும், 2 ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் அணிக்கு ரூ. 36 ஆயிரமும், 3 ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் அணிக்கு ரூ. 24 ஆயிரமும், பரிசுத்தொகையும் வழங்கினார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி.
இதில், உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். திருச்சிராப்பள்ளி மண்டல முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்னமாலா வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராம. சுப்பிரமணியராஜா நன்றி கூறினார்.