Rehearsal program on the occasion of National Disaster Reduction Day at Perambalur: Collector visited.

பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தெப்பக்குளத்தில், தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதை கலெக்டர் வெங்கடபிரியா பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு மழைக் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவிட்டதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பாக பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறை வீரர்கள் பேரிடர் காலங்களில் வெள்ளத்தினாலோ அல்லது தீயினாலோ ஏதாவது அபாயம் ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது எனவும் தீயணைப்புத்துறை வீரர்கள் எவ்வாறு மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறித்தும் செயல் விளக்கத்தினை பொதுமக்களின் பார்வைக்காகவும் நன்மைக்காகவும் செய்து காண்பிக்கப்பட்டது. தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் பேரிடர் காலங்களில் அரசின் வழிகாட்டுதலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மழை மற்றும் மின்னல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நாம் தேவையான முன்னேற்பாடு பணிகளை செய்து இருந்தாலும் உயிருக்கும் உடைமைக்கும் சிறிதளவு கூட சேதம் வரக்கூடாது, யாருக்கும் எந்த இன்னல்களும் வரக்கூடாது என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ 1077 மற்றும் 1800 425 4556 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என பேசினார்.

இதில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் அம்பிகா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், பேரிடர் மேலாண்மைத் துறை வட்டாட்சியர் பாரதிவளவன், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், வருவாய் ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!