Repeat the teacher’s workplace switching scandal need investigation! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாக பணியிட மாறுதல் என்ற பெயரில் கொத்துக்கொத்தாக ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, தமிழக அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த இடமாற்றங்கள் சமூகநீதிக்கு எதிரானவை; கண்டிக்கத்தக்கவையும் ஆகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 400&க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நிர்வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 175 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அரசு, நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆசிரியர்களை அவர்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் அரசு பள்ளிகளை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளாக மாற்றி வருகிறது.

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அப்பகுதியில் புகழ்பெற்ற பள்ளியாகும். அங்குள்ள தனியார் பள்ளிகளையெல்லாம் விஞ்சும் வகையில் மூவாயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர். ஆனால், அந்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களில் பலர் நிர்வாக மாறுதல் பெற்றுச் சென்று விட்டதால் அப்பள்ளியில் தற்போது 2 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி பள்ளியை நடத்த முடியும்?

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. அதையொட்டியுள்ள கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் நிர்வாக மாறுதல் பெற்று தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கு மாற்றாக வேறு ஆசிரியர்கள் எவரும் விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டப் பள்ளிகளுக்கு இட மாறுதல் பெற்று வருவதில்லை.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களில் கடைசி நான்கு இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்கள் இந்த மாவட்டங்கள் தான். அதற்கான முக்கியக் காரணம் இந்த மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாதது தான்.

இந்தக் குறையை களையத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளது. அதை மதித்து வட மாவட்ட பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டிய அரசு, இருக்கும் ஆசிரியர்களையும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் இடமாற்றம் செய்து வருகிறது. இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.

வடமாவட்டங்களில் நிலவும் பின்தங்கிய நிலைமை காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களாக தேர்வாகவில்லை. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பின் தங்கிய பகுதிகளில் பணியாற்ற விருப்பம் இல்லை. அதனால் அவர்கள் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் சொந்த மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இந்த மாவட்டங்களில் இருந்து மட்டும் கடந்த ஒரு மாதத்தில் ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாறுதலுக்கு ரூ.7 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். ஒரு மாறுதலுக்கு ரூ.7 லட்சம் என்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாறுதல்களுக்கு கையூட்டாக எத்தனை கோடி வசூலிக்கப்பட்டிருக்கும்? என்பதை மக்களே கணக்கிட்டுக்கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் கலந்தாய்வு முறையில் பொது மாறுதல் செய்யப்பட வேண்டும் என்பது தான் விதியாகும். அவ்வாறு செய்யப்படும் போது காலியிடங்களுக்கு மட்டும் தான் ஆசிரியர்களை மாற்ற முடியும். பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய முடியாது. அதனால் தான் நிர்வாக மாறுதல் என்ற குறுக்கு வழியில் ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏராளமான ஆசிரியர்கள் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டனர். அதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்று பா.ம.க. குற்றஞ்சாட்டியது. அதைக் கண்டு பொங்கி எழுந்த பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அதுகுறித்து விவாதம் நடத்தத் தயாரா? என சவால் விடுத்தார். ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை வெளியிட்டு விவாதத்துக்குத் தயார் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்து தேதியும் நிர்ணயித்த பின்னர், விவாதத்தில் பங்கேற்க செங்கோட்டையன் மறுத்து விட்டார்.

இடையில் சில காலம் ஓய்ந்திருந்த நிர்வாக மாறுதல் ஊழல் இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆசிரியர்கள் இடமாறுதல் குறித்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இம்மாதத் தொடக்கத்தில் அளித்தத் தீர்ப்பில் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்காக தனிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு ஆணையிட்டிருந்தது.

அத்தகைய கொள்கையை உருவாக்க வேண்டிய அரசு, அதற்கு முன்பே ஆசிரியர்களை மாற்றம் செய்து கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, வட மாவட்டங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!