Request the Tamil Nadu Government on behalf of KMDK to declare Gobichettipalayam as a separate district

கொங்குநாடு மக்கள் தேசிய க்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்ற அந்த மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் நிறைவேற்றியிருப்பது பாராட்டுக்குரியது.
நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் இருக்கும் பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் அரசுத்துறை சம்மந்தப்பட்ட பணிகள், திட்டங்கள் காலதாமதமின்றி எளிதாக மக்களை சென்றடையும். மக்களின் பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு கிடைக்கும்.
எந்தவொரு மாவட்டமாக இருந்தாலும் கடைநிலையில் வசிக்கும் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு சிரமம் இல்லாமல் இருக்க வேண்டும். பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக ரீதியில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்படுகிறது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது மட்டும்தான். கள்ளக்குறிச்சியை தனிமாவட்டமாக அறிவிக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பலமுறை தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்.
இதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சியையும், ஈரோடு மாவட்டத்திலிருந்து கோபிசெட்டிபாளையத்தையும் பிரித்து தனிமாவட்டமாக உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று தமிழக அரசையும், தமிழக முதலமைச்சரையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.