Request to change the half yearly exam schedule
மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை மாற்றித் தர வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு, சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குநரிடம் அண்மையில் அளித்த மனு விவரம்:
நிகழ் கல்வியாண்டில்(2018-2019)தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று வரும் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் வரும் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த தேர்வு அட்டவணையில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியில், கணிதம் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கும் நாட்களில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அதே பாடத்தில் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆறு மாதத்துக்கும் மேல் பாடம் நடத்திய ஆசிரியர் தேர்வுக்கு முந்தைய நாள்களில் ஒரே நேரத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களை சரியாக கவனித்து, பயிற்சி அளித்து ஊக்கப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் ஒரு கல்வி ஆண்டில் முழு பாடத்தில் மாணவர்களின் திறனை சோதிக்கும் முதல் தேர்வு அரையாண்டு தேர்வாகும்.
ஆகவே மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அரையாண்டு தேர்வு கால அட்டவணையில் தேதியை மாற்றம் செய்யாமல் 12-ஆம் வகுப்புக்கு தமிழ் தேர்வு நடக்கும் நாளில் 11-ஆம் வகுப்புக்கு ஆங்கில தேர்வு நடத்துதல் என அனைத்து பாடங்களின் தேர்வு தேதிகளை மாற்றி புதிய திருத்தம் செய்யப்பட்ட அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட வேண்டும்.