Resolution at the Perambalur traders association conference to implement the Tamil Nadu Merchant Welfare Board
பெரம்பலூரில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பான மாவட்ட வணிகர் நலச்சங்கம் சார்பில் 36-வது வணிகர் தினவிழா மற்றும் 2-வது மாவட்ட மாநாடு கர்ணம் திருமண மகாலில் நேற்று நடந்தது.
 
மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சத்யா நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் நல்லதம்பி வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் முகம்மது ரபீக் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் விநாயகா ரவிச்சந்திரன் தீர்மானங்கள் வாசித்தார்.  இதில் தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தின் நிறுவன தலைவர் சீனிவாசன், செயலாளர் நீலராஜ், சங்கத்தின் கவுரவத் தலைவர் அஸ்வின்ஸ் கே.ஆர்.வி. கணேசன், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அரசிராஜசேகரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். இதில் இமயவரம்பன் அரும்பாவூர் குறிஞ்சிசிவா நளபாகம் முத்துவீரன், தம்பு பாலாஜி மாநாடுக்குழு பொறுப்பாளர்கள் ராஜசேகர், குமார், காமாட்சி யுவராஜா உள்பட பலர்  கலந்து கொண்டனர்.
 
மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானங்கள் வருமாறு: 
 
சென்னையில் இருந்தும், நாகர்கோவில், மதுரை பகுதிகளில் இருந்தும் பெரம்பலூர் வழியாக இருதிசைகளிலும், அடிக்கடி இயக்கப்படும் தொலைதூர அரசு பேருந்துகள் நின்றுசெல்லும் வகையில் துறைமங்கலம் நான்கு சாலை அருகே கூடுதல் பேருந்துநிலையம் அமைக்கவேண்டும். 
 
வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி அருகே பச்சைமலையில் சின்னமுட்டுலு பகுதியில் கல்லாற்றின் குறுக்கே ரூ.100 கோடி செலவில்அணைக்கட்டும் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதுடன், பச்சைமலையில் லாடபுரம் அருகே அமைந்துள்ள ஆணைக்கட்டி அருவியில் இருந்து வெளியேறும் காட்டாற்று நீர் மற்றும் ஊற்று நீரை தடுத்து 14 ஏரிகள் மற்றும் குளங்களில் எளிதில் நீர்நிரம்பும் வகையில் புதிய நீர்த்தேக்கமும் போர்க்கால அடிப்படையில் கட்டித்தரவேண்டும். 
 
பெரம்பலூர் நகரில் அன்றாடம் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பெரம்பலூர் நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. பெரம்பலூர் நகரில் வாரத்திற்கு ரூ.1000 செலவு செய்து குடிநீரை விலைக்கும் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஆகவே அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் கொள்ளிடத்தில் இருந்து பெரம்பலூர் நகருக்கு மட்டும் பிரத்யேகமாக காவிரி குடிநீர் வழங்கும் ரூ.85 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
 
பெரம்பலூர் நகரிலும், மாவட்டம் முழுவதும் கடைகளிலும் வீடுபுகுந்தும் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருகிறது. இதனை தடுக்க குற்றப்பிரிவு காவலர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். பெரம்பலூரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் காவல் நிலையம் அமைக்கவேண்டும்.
 
முசிறி அருகே கொள்ளிடத்தில் இருந்து துறையூர், பெரம்பலூர் வழியாக நீர்ப்பாசன வசதிக்காக கொள்ளிடக் கால்வாய் வெட்டும் திட்டம் குறித்து ஆய்வுமேற்கொண்டு, நீh;ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற மத்திய, நீர்ப் பாசனத்துறை மற்றும் மாநில பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
பெரம்பலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் நோக்கில் அரியலூரில் இருந்து பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில் புதிதாக ரெயில் பாதைஅமைத்து, ரெயில்கள் விடுவதற்கு மத்திய ரெயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 
 
பெரம்பலூர் மாவட்டத்திற்கென பத்திரப்பதிவு மாவட்ட அலுவலகத்தை புதிதாக உருவாக்கவேண்டும்.  தமிழக அரசு வணிகர் நல வாரியத்தை செயல்படுத்தவேண்டும்.  60 வயது கடந்த வணிகர்களுக்கு அரசு ஓய்வூதியமும், அரசு பேருந்தில் சலுகையும் வழங்கவேண்டும்.
 
பெரம்பலூர் காமராஜர் பேருந்து நிலையப் பகுதியில் சைக்கிள் ஸ்டாண்டு நிறுவிடவும். பழைய, புதிய பேருந்து நிலையங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே, நடைமுறையில் இருந்தபடி 3 மாதத்திற்கு ஒருமுறை வணிகர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை தமிழக அரசு நடத்திட உத்திரவிடவேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டதுணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!