Road into the lake: Perambalur Collector personally inspects the complaint given by the people at the GDP; Order to remove the occupation!

பெரம்பலூர் மாவட்டம், காரை ஊராட்சி புதுக்குறிச்சியில் ஏரியை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்படுவதாக நேற்று, திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், கலெக்டர் கற்பகம், சம்பவ இடத்தை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிலத்தின் வரைபடங்களையும், ஆவணங்களையும் ஆராய்ந்து ஏரியை அடையும் வரை வண்டிப் பாதையாக உள்ளது. எனவே, ஏரிக்குள் சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் நீர் நிலைகளைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றது. நீர்நிலைகளை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

பின்னர் காரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பதிவு முகாம் நடைபெறுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பள்ளியில் போதிய வகுப்பறைகள், அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார்கள். அப்போது பள்ளியை ஒட்டிய பகுதியில் குப்பைகள் கிடப்பதை பார்த்த அவர், இன்று மாலைக்குள் இந்தப் பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி, சுத்தம் செய்திட வேண்டும் என்றும், இங்கு யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் பராமரிக்க வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு உத்தரவிட்டார்.

பின்னர், அப்பகுதியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் இரண்டு பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீட்டின் பணிகளைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களுக்காக கட்டப்படும் வீட்டின் தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல், உறுதியான தரமான வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று வட்டார பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் காரையில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் உணவுப்பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றதா, முறையாக அளவிடப்படுகின்றதா என்று கேட்டறிந்தார் . பின்னர் நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்ற வகையிலான உணவுப் பொருட்கள் இருப்பு உள்ளதா என்பது குறித்து விரிவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, நாரணமங்கலத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பராமரிக்கப்படும் நர்சரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அங்கு, சரக்கொன்றை, தூங்குவாகை, புளி, முருங்கை, வேம்பு, வன்னி, அத்தி, புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான 31,290 கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். இங்கு வளர்க்கப்படும் முருங்கை உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகளை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, ஆலத்துார் வட்டாட்சியர் முத்துக்குமார், ஆலத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!