Rs. 3 crores, Collector initiates digging of 20 drains in Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 73- ஏரிகளும், 33- அணைக்கட்டுகளும் மற்றும் 5- ஆறுகளும் உள்ளன. கடந்த 06.02.2024 அன்று அரசாணை (2டி) எண்.3 நீர்வளத் (கே1) துறையின் படி நீர்வளத்துறை 2024-2025 ஆம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள்/ நீர் ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 823 பணிகளை 4542.33 கிலோ மீட்டர் நீளம் வரை மேற்கொள்ள ரூ.95.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி தமிழக முதலமைச்சர் அமைச்சரால் ஆணை வெளியிடப்பட்டது.

இதில் ரூ. 3 கோடி மதிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் 20 வாய்க்கால்களை தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குரும்பலூர் வரத்து வாய்க்கால், பொம்மனப்பாடி ஏரி உபரிநீர் வாய்க்கால், கீழக்கரை மதவாணையம்மன் ஏரி உபரி நீர் வாய்க்கால், வேப்பந்தட்டை வட்டம் அரசலூர் ஏரி வரத்து வாய்க்கால், தழுதாழை ஏரி உபரி நீர் வாய்க்கால், வெங்கலம் ஏரி வரத்துவாய்க்கால், தொண்டமாந்துறை ஏரி உபரிநீர் வாய்க்கால், பெண்ணக்கோணம் ஏரி வரத்துவாய்க்கால், துங்கபுரம் ஆனைவாரி ஓடை, கீழப்புலியூர் ஏரி வரத்து வாய்க்கால் உள்ளிட்ட 20 ஏரிகளின் வரத்து வாய்க்கால்கள் மற்றும் உபரிநீர் வாய்க்கால்கள் சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் தூர்வாரப்படவுள்ளது.

கீழக்கரை ஊராட்சியில் உள்ள மதவாணையம்மன் ஏரியின் வடிகால் வாய்க்காலினை பார்வையிட்ட கலெக்டர் கற்பகம், வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி பக்கக்கரையை வலுப்படுத்துவதன் மூலம் நீர் வெளியேற்றும் திறன் அதிகரிக்கப்பட்டு பக்க நிலங்கள் சேதம் ஏற்படுவதை தடுக்கப்பட்டு விவசாய உற்பத்தி அதிகரிக்க ஏதுவாக அமையும். எனவே, வடிகால் வாய்க்காலினை முழுமையாக அளந்து, ஆக்கிரமிப்புகள் ஏதும் இருப்பின் அவற்றை அகற்றி மழைக்காலங்களில் நீர் முழுமையாக கடைநிலை வரை சென்று சேரும் வகையில் தூர்வார வேண்டும் என கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, பெரம்பலூர் யூனியன் மீனாஅண்ணாதுரை, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வை.வேல்முருகன், எசனை திமுக பிரமுகர் மணிவாசகம், குணசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!