பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நடந்த தேரோட்டத்தில் பங்கேற்க குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரனுக்கு கிராம மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி கிராமத்தில் உள்ள சக்தி விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 6 ஆம் தேதி காப்பு கட்டுதல் தொடங்கின. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நாள்தோறும் இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
இந்நிலையில் புதுவேட்டக்குடி கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்க குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் கட்சியினருடன் அந்தப் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது,அந்த கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்க வேண்டுமென தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து எம்.எல்.ஏ., ராமச்சந்திரனுக்கு எதிராக கிராம மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். . இதனால் அதிமுகவினருக்கும்,தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சிலருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் அலாவுதீன் தலைமையிலான போலீஸார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பிரதான வீதிகள் வழியே சென்ற தேரோட்டம் மாலை நிலையை மீண்டும் வந்தடைந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.