rule of Jayalalithaa’s higher education rate is higher: Chief Minister EPS is proud

ஜெயலலிதாவின் 6 ஆண்டு கால ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 45 சதவிதமாக உள்ளது என்று சாயர்புரத்தில் நடைபெற்ற கல்லுாரி விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

தூத்துக்குடி சாயர்புரம் போப் தன்னாட்சி கல்லுாரி துவக்க விழா மற்றும் அறிவியல் பிரிவு விரிவாக்கக் கட்டட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லுாரி முதல்வர் செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். துாத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு போப் கல்லுாரியை தன்னாட்சி கல்லுாரியாக அறிவித்த அரசு ஆணையை வெளியிட்டு, அறிவியல் பிரிவு விரிவாக்கக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது, போப் கல்லுாரியின் இவ்விழாவில் கலந்து கொள்வதில் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். கனடாவில் பிறந்து, தமிழ் அறிஞராக மாறிய ஜி.யூ போப் நினைவாக 1880 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியாக துவங்கப்பட்டு, பின்னர் 1962 ஆம் ஆண்டில் அப்பள்ளியின் பழைய மாணவர்களால் தொடங்கப்பட்ட இக்கல்லுாரி, இன்று 1700 மாணாக்கர்களுடன் இப்பகுதியில் ஒரு சிறந்த உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது.

போப் கல்லூரி தரமான கல்வியை சமூகத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக, ஏழை எளிய பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சமூக பொருளாதார மாற்றத்திற்கான முகவர்களாகவும், பொறுப்பான குடிமகன்களாகவும் உருவாக்கப் படுகிறார்கள்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது, அப்போது 100க்கு 21 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால், கல்வியில் ஏராளமான திட்டங்களை நம்முடைய மாணவர்களுக்கு கொடுத்ததன் விளைவாக இன்றைக்கு உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை 44.3 சதவீதமாக உயர்ந்து, தமிழகம் கல்வியிலே ஒரு சிறந்த மாநிலமாக விளங்கி கொண்டிருக்கிறது.

இந்திய அளவில் பார்க்கும் பொழுது உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 24.5 சதவீதம் தான். தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது.

அது மட்டுமல்ல கிராமத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதாரண குடும்பத்திலே இருக்கிற மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்க வேண்டும், பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் 6 ஆண்டு கால ஆட்சியிலே ஏராள மான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாட்டிலே நிறுவினார்கள்.

6 ஆண்டு கால ஆட்சியிலே 4 பொறியியல் கல்லூரிகள், 16 பாலிடெக்னிக், கல்லூரிகள், 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள் என்று மொத்தம் 65 கல்லூரிகள் துவக்கப்பட்டது அம்மாவினுடைய அரசில்தான்.

மாணவர்கள் அவர்களது விருப்பத்திற்கேற்ப பல்வேறு பாடப்பிரிவுகளைக் கற்று வேலைவாய்ப்பினைப் பெறவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 6 ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 961 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பாடப்பிரிவுகளைக் கையாள்வதற்கு தேவையான 1996 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப் பட்டு, அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உயர் கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக சுயநிதி கல்லுாரிகளில் பயிலும் ஆதி திராவிட,பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்விக் கட்டணம் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்தப்பட்டு, அவர்களின் நிதிச்சுமை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் சுமார் 4 லட்சத்து, 20 ஆயிரத்து, 851 விலையில்லா மடிக்கணினி வழங்கிய பெருமை அம்மாவையே சாரும்.

ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, 2017-18 ஆம் கல்வி ஆண்டில் 9 அரசு கலை மற்றும் அறிவியல்,கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவக்கி உள்ளது. இதுமட்டுமல்லாமல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 268 புதிய பாடப்பிரிவுகளும், பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 89 புதிய பாடப் பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டினைப் போற்றும் வகையில்,68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 ஆண்டுகளில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்டப்பட்டு, அவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம் என பெயரிடப்படும் என சட்டப்பேரவை விதி 110ன்கீழ் நான் அறிவித்து இருந்தேன். அதற்கான பணிகள் விரைவில் துவக்கப்படும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டு உயர் கல்விக்கென கல்லூரி இல்லாத மாவட்டம், தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட இந்த அரசு,அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு மட்டும் அல்லாது,தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கும், சிறுபான்மையினர் தகுதி அளிக்க அரசாணை வெளியிட்டு ஊக்குவித்து வருகிறது. போப் கல்லூரிக்கும், ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு,5 வருடங்களுக்கு சிறுபான்மையினர் நிலையினை நீட்டித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

போப் கல்லூரி சுயாட்சி பெற்றதை சிறப்பிக்கும் இவ்விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணாக்கர்களும் சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்வில் ஒரு சிறப்பான நிலையை அடைவதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜலட்சுமி, துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் (பொ) வீரப்பன், செய்தித்துறை இணை இயக்குனர் எழில், எம்பிக்கள் நட்டர்ஜீ, பிரபாகரன்,விஜயகுமார், எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ., முன்னாள் அமைச்சர் சி த செல்லப் பாண்டியன், திருமண்டல பொருளாளர் மோகன்,சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மோகன், சின்னப்பன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் லே செயலாளர் எஸ்டிகே ராஜன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!