Samathuva Pongal in all villages in Perambalur District! Collector Info!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் அறிவுரைகளின்படி, தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாச்சார வழியில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தைத்திருநாள், தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா சீரும் சிறப்புமாக நடைபெறுவதை தொடர்ந்து, இந்த ஆண்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளிலும் பொங்கல் திருவிழாவானது ”சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல்” என்ற வகையில் 13.01.2023 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
கிராமிய மனம் கமழும் இந்த பொங்கல் திருநாள், சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒன்றுக்கூடி நடத்திடும் பெருவிழாவாக நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வில் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்கள், சமுதாய வள பயிற்றுநர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாயம் சார்ந்த அமைப்பினரும் கலந்துகொள்ளும் வகையில் இந்நிகழ்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகள், உள்ளுர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஊராட்சிகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் போன்ற ஊராட்சியின் அலுவலர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாது, அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. சுகாதார பொங்கல் மற்றும் சமுத்துவ பொங்கல் விழா முறையாக நடைபெறுவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு விழா நடைபெறுவதை மேற்பார்வையிட உள்ளனர்.
சமத்துவ கருத்துகளை வலியுறுத்தும் வகையிலும், அனைத்து மகளிரின் ஒற்றுமை உணர்வை வளர்த்திடும் வகையிலும், பேச்சுப்போட்டி, கோலப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட கீழ்காணும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
கோலம் / ரங்கோலி : கோலங்கள்/ போட்டிகள் மகளிரின் பிரச்சனைகள் விவரிக்கும் விதத்தில் இருத்தல் வேண்டும். போட்டிகள் கல்லூரி மற்றும் பள்ளி விளையாட்டு மைதானங்களில் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு SHG/PLF-லும் நான்கு நபர்கள் பங்கேற்க வேண்டும். விவாதமேடை / பேச்சுப்போட்டி : போட்டிகள் மகளிர் தொடர்பான தலைப்புகளாக இருத்தல் வேண்டும். போட்டியில் ஒவ்வொரு SHG/PLF -லும் குறைந்தபட்சம் மூன்று நபர்கள் பங்கேற்க வேண்டும்.
குழு பாட்டு : கிராமிய பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். 5 நிமிடங்கள் கொண்டவையாக இருத்தல் வேண்டும்.5 நபர்கள் பங்கேற்க வேண்டும். தெருக்கூத்து / நாடகம்: நான்கு முதல் ஐந்து நபர்களைக் கொண்ட அணி கலந்து கொள்ளலாம். காலஅளவு 20 நிமிடங்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.