Scholarship for Mature Tamil Scholars : Perambalur Collector Information!
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் 01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.03.2023க்குள் அளிக்கப்பட வேண்டுமெனவும் நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என, பெரம்பலூர் கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.