Scholarship on behalf of the Perambalur Community Web Service Group

பெரம்பலூர் ஹேப்பி டீம் 2.0 என்ற வாட்ஸ்அப் சமூக வலைதள சேவைக்குழுவின் 3ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி கல்வி உதவி தொகை வழங்கல் மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது.

பெரம்பலூர் ஹேப்பி டீம் 2.0 என்ற வாட்ஸ் அப் சமூக வலைதள சேவைக்குழு இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற தாரக மந்திரத்தோடு இயலாதவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி உதவி தொகை, மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, உபகரணங்கள், அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

இக்குழுவின் 3ம் ஆண்டு தொடக்கவிழாவை கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மரக்கன்று நடும் விழா ஆகியன பெரம்பலூர் வெள்ளந்தாங்கியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார். சீனிவாசன் இருபாலர் கலைக்கல்லூரி துணை முதல்வர் ரவி, அரியலூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்விநிறுவன தாளாளர் சிவசுப்ரமணியம் கலந்துகொண்டு பார்வையற்ற முனைவர் பட்டபடிப்பு படிக்கும் மாணவர் ரஞ்சித்திற்கு ரூ.30ஆயிரமும், தந்தை இழந்து வாடும் ஏழை கல்லூரி மாணவி ஷர்மிளாவிற்கு ரூ.40ஆயிரமும் என கல்வி உதவி தொகைகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், பிறருக்காக கைத்தட்டும் கல்லூரி மாணவ, மாணவிகளாகிய நீங்கள் மற்றவர்கள் நமக்காக கைத்தட்டும் நிலையை ஏற்படுத்தவேண்டும். திட்டமிடுதல், தூண்டுதல், கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றை கடைபிடித்து தாங்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியும் என்றார்.

பின்னர் வெள்ளத்தாங்கியம்மன் ஏரிகரையில் 100 மரக்கன்றுகள் நடுதலை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவ,மாணவிகள் மற்றும் ஹேப்பி டீம் குழு உறுப்பினர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.

விழாவில் குழு செயலாளர் சீனிவாசன், பொருளாளர் கீதா, உறுப்பினர்கள் செந்தில்குமார், பாலு, ரமேஷ், ராஜீவ்காந்தி, பாலகிருஷ்ணன், சரண்யா, மகேஸ்வரி,விஜயலலிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி கல்வித்துறை கண்காணிப்பாளர் சரவணசாமி வரவேற்றார். முடிவில் விநாயகா ஸ்டீல்ஸ் ரவி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!