Select the IAS Reform: Recommendations risky financial ayok – Do not accept! Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள் அறிக்கை:

இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளுக்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அமைப்பு வழங்கியுள்ளது. சீர்திருத்தம் என்ற பெயரில் நிதி ஆயோக் அமைப்பு அளித்துள்ள இப்பரிந்துரைகள் அனைத்துமே குடிமைப்பணிகளுக்கான தேர்வு முறையை அடியோடு சீரழிக்கும் தன்மை கொண்டவையாகும்.

2022-ஆம் ஆண்டில் 75-ஆவது ஆண்டு விடுதலை நாளைக் கொண்டாடவிருக்கும் ‘புதிய இந்தியாவுக்கான உத்திகள்’ என்ற பெயரில் 232 பக்கங்கள் அடங்கிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது. குடிமைப்பணிகள் தொடர்பான பரிந்துரைகளில், குடிமைப் பணித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பொதுப்பிரிவின் வயது வரம்பை 27-ஆக குறைக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து குடிமைப் பணிகளுக்கும் ஒரே தேர்வை நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களை மாநில அரசுகள் குடிமைப் பணிகளில் அமர்த்திக் கொள்ள வேண்டும், குடிமைப் பணிகளில் இ.ஆ.ப., இ.கா.ப. உள்ளிட்ட பிரிவுகளை தர வரிசைப்படி வழங்குவதை விடுத்து தேர்வர்களின் திறமையைப் பொறுத்து ஒதுக்கீடு செய்யலாம் என்று நிதி ஆயோக் கூறியிருக்கிறது. இவை சமூக நீதிக்கு மட்டுமின்றி, மாநில சுயாட்சி உள்ளிட்ட இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கும் ஆபத்தானவை. சீர்திருத்தம் என்ற பெயரில் திணிக்கப்படும் இதை ஏற்க முடியாது.

இந்தப் பரிந்துரைகளில் எதுவுமே புதியவை அல்ல. ஏற்கனவே பல்வேறு பெயர்களில் திணிக்க முயன்று முறியடிக்கப்பட்டவை தான் இப்போது நிதி ஆயோக்கின் மூலம் புதிய இந்தியாவுக்கான உத்திகள் என்ற பெயரில் முலாம் பூசப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. குடிமைப் பணித் தேர்வுக்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என்ற பரிந்துரையை 2016&ஆம் ஆண்டில் பி.எஸ்.பாஸ்வான் குழு வழங்கியது. அப்பரிந்துரையை பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாக எதிர்த்ததால் அது அப்போதே கைவிடப்பட்டது. இந்திய அரசு நிர்வாகத்தில் அடித்தட்டு மக்களும் பங்கேற்க உதவியாக இருப்பது குடிமைப்பணித் தேர்வுகளில் பங்கேற்க அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வயது வரம்பு தான். அவ்வுரிமையை இழக்க முடியாது.

தற்போது பொதுப்பிரிவினர் 32 வயது வரை இத்தேர்வில் பங்கேற்கலாம். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 வயது வரையிலும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்கள் 37 வயது வரையிலும் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதலாம். இதுபோதுமானதல்ல என்பதால் அதிகபட்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 35 வயதாகவும், மற்றவர்களுக்கு 40 வயதாகவும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இக்கோரிக்கையை ஏற்பதற்கு மாறாக, வயது வரம்பை முறையே 27, 30, 32 என குறைக்க முயல்வது சரியல்ல. குடிமைப் பணியில் சேர்வதற்கான வயது வரம்பில் 5 ஆண்டுகளைப் பறிப்பது பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் குடிமைப் பணிக் கனவை சிதைக்கும் செயலாகும்.

இந்தியாவில் ஒருவர் பட்டப்படிப்பை 21 ஆண்டுகளிலும், பொறியியல் படிப்பை 22 ஆண்டுகளிலும், மருத்துவப் படிப்பை 23 ஆண்டுகளிலும் தான் நிறைவு செய்கிறார். அதன்பின் தேர்வுக்கு தயாராக 2 ஆண்டுகள் தேவை. அப்படியானால் மருத்துவம் படித்த பொதுப்பிரிவு மாணவர் அதிகபட்சமாக இரு முறை மட்டுமே குடிமைப் பணித் தேர்வுகளை எழுத முடியும். இது மிக மோசமான சமூக அநீதியாகும்.

குடிமைப்பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோரின் சராசரி வயது 2005 ஆம் ஆண்டில் 27.5 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 28.6 ஆகவும் உள்ளது. அப்படியானால் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் 15 முதல் 20 விழுக்காட்டினர் 32 வயது அல்லது அதற்கும் அதிக வயதுடையவர்களாக இருப்பார்கள். இத்தகைய சூழலில் அதிகபட்ச வயது ஓராண்டு குறைக்கப்பட்டால் 15-20 விழுக்காட்டினரின் வாய்ப்பு பறிக்கப்பட்டு விடும். அவ்வாறு இருக்கும் போது அதிகபட்ச வயது ஐந்தாண்டுகள் குறைக்கப் பட்டால் மாணவர்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை.

அதேபோல், இ.ஆ.ப., இ.கா.ப. உள்ளிட்ட பிரிவுகளை தர வரிசைப்படி ஒதுக்குவதற்கு மாற்றாக திறமை அடிப்படையில் ஒதுக்கலாம் என்ற பரிந்துரை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வேண்டியவர்களுக்கும், வாரிசுகளுக்கும் முறைகேடாக சலுகை காட்டவே வழி வகுக்கும். ஒவ்வொருவரின் திறமையையும் தனித்தனியாக மதிப்பிட முடியாது என்பதால் தான், பொதுவான தேர்வு முறை கடைபிடிக்கப்படுகிறது. அதை விடுத்து திறமையைப் பொறுத்து பணி ஒதுக்கீடு செய்வது அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும்.

மத்திய, மாநில அரசுகளில் உள்ள 60-க்கும் கூடுதலான குடிமைப் பணிகளுக்கு ஒரே தேர்வை நடத்த வேண்டும்; மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையே மாநில அரசுகளும் பணியமர்த்த வேண்டும் என்பது மாநில அரசுகளுக்கு இப்போதுள்ள அதிகாரங்களை பறிக்கும் செயலாகும். இது மத்திய – மாநில அரசு உறவுகள் தொடர்பான நீதிபதி சர்க்காரியா ஆணையம் அளித்த பரிந்துரைகளுக்கு எதிரானது.

நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரைகள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இல்லை. மாறாக சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டில் இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் வகையில் தான் உள்ளன. இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரான இப்பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!