Senthilbalaji has try to join the ADMK for refusing, So, He Join in the DMK: Minister P.Thangamani
செந்தில்பாலாஜி அதிமுகவில் சேர முயற்சி செய்தார். ஆனால் அவரை சேர்த்துக்கொள்ள கட்சி தலைமை மறுத்துவிட்டது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
செந்தில்பாலாஜி திமுகவில் இருந்து தான் அதிமுகவுக்கு வந்தார். மீண்டும் திமுகவுக்கு போய்விட்டார். திமுகவில் இருக்கும் போது செந்தில்குமார், அதிமுகவிற்கு வந்த பிறகு செந்தில்பாலாஜி. இப்போது மீண்டும் செந்தில்குமார் என பெயர் மாற்றிக்கொள்வார்.
அவர் திமுகவில் இருக்கும்போது ஒன்றியக் கவுன்சிலராக இருந்தார், இப்போது அவர் வெறும் உறுப்பினராக தான் இருக்கப் போகிறார். திமுகவில் அந்த சிறப்பு தான் அவருக்கு கிடைக்கும். அவர் சாந்திருந்த கட்சியை சேர்ந்தவர் அவர் குறித்து பேசும்போது முலாம் பூசப்பட்ட தங்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அவரிடம் இருக்கிறவர்கள் எல்லாம் முலாம் பூசப்பட்டவர்கள் தான், எங்களிடம் இருப்பவர்கள் அனைவரும் சொக்கத்தங்கம்.
செந்தில்பாலாஜிஅதிமுகவில் இருந்து விலகி 2 ஆண்டுகள் ஆகி விட்டது.
திமுக, மதிமுக, அதிமுக, அமமுக இப்போது மீண்டும் திமுக என பல கட்சி மாறியுள்ளார். பல கட்சி மாறிய, பச்சோந்தி வேஷம் போடுபவர்கள் பேசும் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுகவில் இருந்து ஒரு சாதாரண தொண்டர் கூட திமுகவிற்கு செல்லவில்லை. அமமுகவில் இருந்து தான் திமுகவிற்கு சென்றுள்ளனர். அதிமுக, அமமுக இணைக்கும் முயற்சி இல்லை. டி.டி.வி.தினகரன் தவிர்த்து வேறு யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம் என முதல்வர் கூறியிருக்கிறார்.
செந்தில்பாலாஜி அதிமுகவில் சேர முயற்சி செய்தார். ஆனால் அவரை சேர்த்துக்கொள்ள கட்சி தலைமை மறுத்துவிட்டது. அவர் பல கட்சிக்கு சென்றவர், இப்போது மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டால், கட்சியில் ஏதாவது குழப்பம் செய்வார் என நினைத்து அவரை கட்சியில் சேர்க்க வேண்டாம் என தலைமை முடிவு எடுத்திருக்க கூடும்.
முக.ஸ்டாலின் இந்த ஆட்சி நீடிக்காது என கடந்த 2 ஆண்டுகளாக செல்லிக்கொண்டு தான் இருக்கிறார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம். அடுத்து வரும் தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றிபெறுவோம்.
கஜா புயலால் 2.31 லட்சம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மின் வாரியத்துக்கு மட்டும் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளி்ல் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை 100 சதவீதம் மின் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் 90 சதவீதம் அளவுக்கு மின் விநியோக சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் 4 அல்லது 5 நாட்களில் முழுமையாக பணிகள் முடிந்துவிடும். வேதாரண்யம் பகுதியில் 3 அல்லது 4 நாட்களில் பணிகள் முடிந்துவிடும் என்றார்.