எருமைப் பண்ணைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Murrah_buffalo

எருமை வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 6 எருமைப்பண்ணைகள் அமைத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் முதற்கட்டமாக 4 எருமைப் பண்ணைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எருமைப்பண்ணை அலகு ஒன்று 5 எருமைகள் கொண்டதாக இருக்கும். முதலில் 3 எருமைகள் வாங்கி வழங்கப்படும். எருமைப் பண்ணை அலகு ஒன்றின் மொத்த நிதி ரூ.4,32,500 அவற்றில் 25 சதவீதம் நிதி ரூ.1,08,125 மட்டும் பயனாளிகளால் செலுத்தப்படவேண்டும். மீதமுள்ள 75 சதவீத நிதி ரூ.3,24,375 அரசு மானியமாக வழங்கப்படும். பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

பயனாளிகளுக்கு 300 சதுர அடி காலியிடம் மாட்டுக்கொட்டகை அமைத்திட இருத்தல் வேண்டும். மேலும், ஒரு ஏக்கர் நிலப்பரப்பு கால்நடை தீவனப்பயிர்கள் மற்றும் தீவனப்புல் வளர்த்திட சொந்தமாகவோ குத்தகை நிலமாகவோ இருந்திட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் பயனாளியின் பெயர், பாலினம், வயது, ஜாதி விவரம், முகவரி, தொடர்பு தொலைபேசி எண் மற்றும் தற்போது பயனாளிகளிடமுள்ள பசு மாடுகள் மற்றும் எருமை இனங்கள் விவரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

மேலும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஜாதி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நிலத்திற்கான பட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்யப்படும். பயனாளிகள் எருமைகளை குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து வளர்த்திட வேண்டும். தவறும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 25 சதவீத தொகை ரூ.1,08,125 சம்மந்தப்பட்ட உதவி இயக்குநர் கணக்கில் வரைவோலையாக செலுத்த வேண்டும்.

மேலும் 300 சதுரஅடி நிலப்பரப்பில் கொட்டகை கட்டுவதற்கு மதிப்பீடான ரூ.1,50,000 செலவில் கட்ட வேண்டும். கால்நடை தீவனப்புல் 24 சென்ட் நிலப்பரப்பில் வளர்த்திட புல் கரணைகள் மற்றும் உரம் வாங்கிடும் வகையில் ரூ.2,600 மற்றும் 76 சென்ட் நிலப்பரப்பில் டெஸ்மாந்தஸ் தீவனப்புல் விதைகள் மற்றும் உரம் வாங்கிடும் வகையில் ரூ.4400 மற்றும் ஒரு தெளிப்பு நீர் பாசன கருவி நிறுவுவதற்கு ரூ.25,000 மற்றும் ஒரு புல் வெட்டும் கருவி வாங்கிட ரூ.20,000 ஆக மொத்தம் ரூ.52,000 கால்நடை தீவனம் ஒரு ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்வதற்காக வழங்கப்படும்.

முர்ரா இன எருமைகள் முதற்கட்டமாக மூன்று எருமைகள் பிற மாநிலத்தில் இருந்து வாங்கி வழங்கப்படும். எருமை ஒன்றின் விலை ரூ.40,000 வீதம் மொத்தம் 5 எருமைகள் வாங்கிட ரூ.2,00,000 நிதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எருமைகளை காப்பீடு செய்வதற்கு ரூ.10,000 மற்றும் போக்குவரத்து கட்டணம் ரூ.10,000 வழங்கப்படும். மேலும் எருமைப்பண்ணை அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்கிட ரூ.10,000 வழங்கப்படும்.

மேலும் இரண்டு நாட்கள் மாவட்ட தலைமையிடத்தில் வைத்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்களால் பயிற்சி வழங்க ரூ.500 செலவினம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால் பண்ணையில் இத்திட்டம் மூலம் வழங்கப்பட்;ட எருமைகளின் பால் அருகில் உள்ள பதிவு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்கள் பகுதியை சார்ந்த கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொண்டு 30.07.2016க்குள் தங்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!