Sexual violations: killing a child should be punished severely tormentor: PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலியல் அத்துமீறலுக்கு பணிய மறுத்த 13 வயது சிறுமியை அவரது அண்டை வீட்டுக்காரன் கொடூரமான முறையில் தலையை அறுத்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

குழந்தையாகவும், சகோதரியாகவும் பார்க்க வேண்டிய சிறுமியை சிதைக்க முயன்றதுடன், படுகொலையும் செய்திருப்ப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சுந்தரபுரத்தில் வசிக்கும் விவசாயி சாமிமுத்து. அவரது மனைவி சின்னப்பொண்ணு. அவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மூத்த மகளுக்கு மணமாகி விட்ட நிலையில் மகனும், இளைய மகளும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். அவர்களில் மகள் ராஜலட்சுமி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

இவர்களுக்கு அடுத்த வீட்டில் தினேஷ்குமார் என்ற 27 வயது இளைஞன் அவரது மனைவி சாரதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். கதிர் அறுக்கும் இயந்திரத்தை வாடகைக்கு இயக்கும் தினேஷ்குமாருக்கு 4 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இரு குடும்பத்தினரும் நட்புடன் பழகிவந்துள்ளனர்.

குழந்தையுடன் விளையாடவும், பூப்பறிக்கவும் தினேஷ்குமார் வீட்டுக்கு சிறுமி ராஜலட்சுமி அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

அப்போதெல்லாம் சிறுமியிடம் தினேஷ்குமார் பாலியல் சீண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றி சிறுமிக்கு தெரியாது என்பதால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

கடந்த 19 ஆம் தேதி ஆயுதபூஜையன்று தமது வீட்டுக்கு வந்த சிறுமியை வாலியல் வல்லுறவு செய்ய தினேஷ்குமார் முயன்றுள்ளான். ஆனால், அவனிடமிருந்து தப்பித்த சிறுமி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களை தாயிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் தாயின் அறிவுரைப்படி தினேஷ்குமார் வீட்டுக்கு செல்வதை சிறுமி தவிர்த்துள்ளார்.

ஆனால், 22.10.2018 தினேஷ்குமாரின் மனைவி அழைத்ததால், சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மனைவி இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமியை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார்.

அதனால் அச்சமடைந்த சிறுமி வீட்டுக்குத் தப்பிச் சென்று தாயிடம் புகார் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் நடந்தவை அனைத்தும் தினேஷ்குமாரின் மனைவி சாரதாவுக்கு தெரியவந்ததாகவும், அவர் கணவனை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் அரிவாளுடன் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரைத் தாக்கி மயக்கமடையைச் செய்திருக்கிறார். பின்னர் சிறுமியின் கழுத்தை வெட்டித் துண்டாக்கியுள்ளார்.

தொடர்ந்து சிறுமியின் தலையை சாலையில் வீசி விட்டு, வீட்டுச் சென்ற தினேஷ்குமாரை அவரது மனைவி சாரதாவும், அவரது தம்பியும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கள்ளங்கபடமற்ற 13 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையைப் பார்க்கும் போது, இத்தகைய கொடிய மிருகங்கள் வாழும் உலகிலா நாமும் வாழ்கிறோம் என்ற எண்ணம் தான் இதயத்தை இடியாய் தாக்குகிறது.

தினேஷ்குமார் தம்மை வெட்ட அரிவாளை ஓங்குவதைப் பார்த்த சிறுமி ராஜலட்சுமி, ‘‘ அண்ணா… என்னை வெட்டாதே…. நான் எந்த தவறும் செய்யவில்லை’’ என்று கதறியிருக்கிறார்.

உயிர்ப்பிச்சைக் கேட்டு மன்றாடியிருக்கிறார். ஆனால், மிருக வெறியின் உச்சத்தில் இருந்த தினேஷ்குமார் அந்தக் கதறலை காதில் வாங்காமல் சிறுமி ராஜலட்சுமியின் தலையைத் துண்டித்து படுகொலை செய்துள்ளான்.

மனிதக் கொடூரன் தினேஷ்குமாரின் செயலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தினேஷ்குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது தவறு; கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் அதிகரித்து விட்டன. ஆனால், இதற்குக் காரணமானவர்களுக்கு 2013 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தின்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படாதது தான் இத்தகைய குற்றங்களைச் செய்ய துணிச்சலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

பொதுவாகவே தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதற்குக் காரணம் கொடிய குற்றங்களை செய்தவர்கள் கூட திருந்துவதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு திருந்தினால் அவர்கள் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதால் தான் தூக்குத் தண்டனையை பா.ம.க. எதிர்த்து வருகிறது.

ஆனால், ஒன்றும் அறியாத சிறுமிகளிடம் தங்கள் பாலியல் வெறியைத் தீர்த்துக் கொள்ள துடிப்பவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புள்ள மனிதர்களாக இருக்க முடியாது.

அதனால், இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடித்து, தினேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து அவருக்கு மிக மிகக் கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!