Should be given justice to the Tuticorin people! Respect for the dead – Transnational Government of Tamil Eelam
தமிழ்நாடு தூத்துக்குடியில் சூழல் மாசுபடுவதற்கும், பொதுமக்களின் சுகாதாரக்கேட்டுக்கும் காரணமாக இருக்கும் ஸ்டர்லைட்( Sterlite )ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் எதிர்ப்புப்போராட்டம் நடாத்திய வேளையில், காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மக்கள் 13 பேர் கொல்லப்பட்டும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ள சேதியறிந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெருங்கவலையும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறது.
மே மாதம் 22, 23 ஆம் திகதிகளில் இடம் பெற்ற இக் கொலைகளையும், பொதுமக்கள் மீதான தாக்குதலையும் வன்மையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, இதற்குக் காரணமானவர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்யப்பட வேண்டும் எனவும் கோருகிறோம்.
போராட்டத்தில் தமது உயிர்களை இழந்த சமூகப்போராளிகளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தலை தாழ்த்தி மரியாதை வணக்கம் செய்வதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த இருதசாப்தங்களாக நடைபெற்று வருவதனை நாம் அறிவோம். மக்களைப் பாதிக்காத எந்தப் பிரச்சனைக்கும் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடாத்துவதில்லை. மக்கள் நடத்தும் போராட்டங்களை அனுமதித்து, போராட்டத்தின் நியாயத்தன்மை குறித்து ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்கும் வழிவகை செய்வதே அரசுகளின் கடமை. அதற்கு மாறாக, மக்களின் போராட்டத்தினைத் துப்பாக்கிச் சூட்டின் மூலம் அடக்க முனைவதோ, போராட்டத்தில் வன்முறைகள் எழக்கூடிய வகையில் அவற்றைக் கையாள்வதோ அரசு கையாளும் மக்கள் விரோதப்போக்கையும் இயலாமையையும் வெளிப்படுத்துவதாகவே அமைகிறது.
இந்த ஸ்டர்லைட் ஆலையின் பாதிப்புகள் குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் வெளிவந்த போதும் ஆலையை மூடுவதற்கான மக்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் முடிவில் இறுதியாக தமிழ்நாடு பசுமை ஆணையம் விதித்த தடையை தேசிய பசுமை ஆணையம் நீக்கி, இந்த ஆலை இயங்குவதற்கான அனுமதியைக் கொடுத்திருக்கிறது என அறிய முடிகிறது. தூத்துக்குடி ஒரு தொழிற்பேட்டையாக இருக்கும் காரணத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு குறிப்பிட்ட ஆலைதான் காரணம் என்பதனை நிச்சயமாகக் கூறமுடியாது எனக் காரணம் கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
பொருண்மிய வளர்ச்சி ( Economic Growth ) சார்ந்த அரச கொள்கையில் உள்ள போதாமைகளை இங்கு இனங்காண முடிகிறது. பொருண்மிய வளர்ச்சி குறித்த நடவடிக்கைகள் மனித மேம்பாட்டுக்குத் ( human development ) தடையாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதனையும் காலம் தாழ்த்தாமல் செய்தாக வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களின் சம்மதம் என்ற சமூக ஏற்பாட்டுடன் இயங்கும் அரசுகள் எவையும் மக்கள் நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். மக்களின் காவலர்களாக அல்லாமல் பெரும் முதலாளித்துவத்தின் காவலர்களாக அரசுகள் மாறிப் போகும்போது அவை தோல்வி கண்ட அரசுகளாகி விடுகின்றன. அதன் விளைவுகள் எவரும் விரும்பத்தகாதவையாகவே இருக்கும்.
இன்றைய வேளையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைத்தாகவேண்டியது மிக முக்கியானதாகும். மக்களின்கோரிக்கைக்கிணங்க ஸ்டர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டியது இதற்கான அடிப்படை முன்நிபந்தனையாக இருக்கும். மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமானோர் இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்டாக வேண்டும். ஆட்சியில் உள்ள அரசியற்தலைவர்களும் இச் சம்பவத்துக்குப் பொறுப்பெடுத்து, துறைசார் அமைச்சர்கள் பதவி விலகி அரசியல் முன்மாதிரியை உருவாக்க வேண்டும். உயிரிழந்தோருக்கு சமூகப்போராளிகள் என்ற அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில்,சூழலுக்குக் கேடு விளைவிக்கும், மக்கள் நலனைப் பாதிக்கும் எந்தவகையானதிட்டங்களுக்கும் பொருண்மிய வளர்ச்சி என்ற பெயரில் நியாயம் கூறி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதமும் கொடுக்கப்பட வேண்டும்.
இவை நடைபெறும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமக்கு ஏற்பட்டவைக்கு ஓரளவாயினும் நீதி கிடைத்துள்ளது என உணர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. தமக்கு நீதி கிடைத்தது என்ற உணர்வு மக்கள் மத்தியில் ஏற்படாவிட்டால் அது எதிர்கால நன்மைக்கு எவ்வகையிலும் உகந்ததல்ல. காலம் தாழ்த்தப்படும் நீதியும் வழங்கப்படாத நீதியாகவே அமையும் என்பதனை உணர்ந்து உரியவர்கள் உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனக் கோருகிறோம்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.