Should have livelihood for Sivakasi Fireworks workers! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

பட்டாசுத் தயாரிப்புக்கு உச்சநீதிமன்றம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து சிவகாசி பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இன்றுடன் 69 நாட்களாகும் நிலையில், அப்பிரச்சினைக்கு இன்று வரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை. இதனால் பட்டாசு ஆலைகளிலும், அவை சார்ந்த பிற தொழில்களிலும் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்ததால், அவர்களின் வாழ்க்கை நரகமாகியுள்ளது.

பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பச்சை உப்பு எனப்படும் பேரியம் நைட்ரேட் வேதிப்பொருளைக் கொண்டு பட்டாசு தயாரிக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலை பாதிக்காக மூலப்பொருட்களைக் கொண்டு பட்டாசுகளைத் தயாரிக்கலாம் என்று நீதிபதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பின்படி பட்டாசுகள் தயாரிப்பது சாத்தியமல்ல என்பதால், நவம்பர் 2-ஆம் தேதி முதல் கடந்த 69 நாட்களாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த 1400-க்கும் கூடுதலான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சிவகாசி பகுதியில் தொழில்துறை முடங்கிக் கிடக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும், எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இன்னும் கேட்டால் இயற்கை நமக்கு அளித்த இவ்வுலகை பாதுகாத்து அப்படியே அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பட்டாசுகள் தான் தயாரிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது. அதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

ஆனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை எவ்வாறு தயாரிப்பது? என்ற வினாவுக்குத் தான் இன்று வரை விடை காணப்படவில்லை. பசுமைப் பட்டாசு என்ற தத்துவமே உலகில் இதுவரை உருவாக்கப்படவில்லை. அண்மையில் தான் மத்திய அரசின் அறிவுரைப்படி சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை தயாரிப்பதற்கான ஒரு சூத்திரத்தை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழு தயாரித்துள்ளது. அதை பட்டாசு ஆலைகள் பயன்படுத்த காப்புரிமைத் தொகை வழங்க வேண்டுமென அந்த நிறுவனம் வலியுறுத்துகிறது. ஆனால், அது பெரும்தொகை என்பதால் அதை வழங்க பட்டாசு ஆலைகள் தயாராக இல்லை. அதுமட்டுமின்றி அந்த சூத்திரமும் பட்டாசு தயாரிப்புக்கு ஏற்றதாக இல்லை.

நைட்ரோ செல்லுலோஸ் எனப்படும் வேதிப்பொருளை பயன்படுத்தி மாசு இல்லாத பட்டாசு தயாரிக்கலாம் என்று ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், நைட்ரோ செல்லுலோஸ் வேதிப்பொருளை வெளியில் எடுத்து வைத்து, அதன்மீது காற்று பட்டாலே அது பயன்பாட்டுக்கு ஒவ்வாததாகிவிடும். இத்தகைய சூழலில் தான் வரும் 22-ஆம் தேதிக்குள் பசுமைப் பட்டாசுகளுக்கான வரையரையை உருவாக்கும்படி பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் பாதுகாப்பு அமைப்புக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற ஆணைப்படி வரையரைகளை உருவாக்குவதோ, தயாரிப்பு முறைகளை கண்டறிவதோ சாத்தியமல்ல. அதனால் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

பசுமைப் பட்டாசுகளை உருவாக்குவற்கான ஆராய்ச்சிகள் இப்போது தொடங்கினாலும், அவற்றிலிருந்து சாதகமான முடிவு கிடைக்க குறைந்தது 4 ஆண்டுகள் ஆகலாம். அதற்காக காத்திருந்தால் விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரமே சிதைந்து விடும். பட்டாசு ஆலைகள் மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.7000 கோடி வருமானம் கிடைக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95% சிவகாசியில் தான் தயாராகிறது. பட்டாசு ஆலைகளிலும், அவை சார்ந்த பிற தொழில்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதேநிலை நீடித்தால் பட்டாசு தொழில் 4 ஆண்டுகளில் என்னவாகும் என நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

பொதுவாக பழைய தொழில்நுட்பத்திலிருந்து புதிய தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டுமானால், புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு ஏற்றது என சான்றளிக்கப்பட்டு, அதன் பின்னர் சிறிது கால அவகாசம் தேவைப்படும். பசுமைப்பட்டாசு உற்பத்திக்கும் இது பொருந்தும். ஆனால், பசுமைப்பட்டாசு என்றால் என்ன என்பதே இன்னும் வரையறுக்கப்படாத நிலையில் அவற்றை தயாரிப்பது எவ்வாறு சாத்தியமாகும்? அதனால், பசுமைப்பட்டாசுக்கான வரையறையும் அவற்றை தயாரிக்கும் முறையும் இறுதி செய்யப்பட்ட பின்னர், ஓராண்டு கால அவகாசத்துக்குப் பிறகு தான் அவற்றின் தயாரிப்பு தொடங்கப்பட வேண்டும். அதுவரை பழைய வரையறைப்படியே பட்டாசு ஆலைகள் செயல்படுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.

மற்றொருபுறம், பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 10 லட்சம் பணியாளர்கள் கடந்த இரு மாதங்களாக வேலை இழந்துந்துள்ளனர். அதனால், அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலையில், அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் விருதுநகர் மாவட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், மீன்பிடி இல்லாத காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல் பட்டாசு ஆலை ஊழியர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!