Siruvachchur statue demolition case: electric lights, permanent guard action; Perambalur Police SP Mani Info!

File Copy

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமான மதுர காளியம்மன் கோவிலின் உப கோவில்களான பெரியசாமி கோவில், செங்கமலையார் கோவில், பெருமாள் கோவில் மற்றும் தனியாருக்கு சொந்தமான சித்தர் கோவில் பெரியாண்டவர் கோவில்களில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலைகளை உடைத்த எதிரி நாதன் (எ) நடராஜன் என்பவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அது தொடர்பாக, பெரம்பலூர் எஸ்.பி மணி தெரிவித்துள்ளதாவது:

சிறுவாச்சூர் கிராமத்தில் இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமான அருள்மிகு மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இதன் உபகோவில்களான பெரியசாமி, செங்கமலையார், பெருமாள் கோவில்கள் மலையடிவாரத்தில் சுட்ட மண்ணால் ஆன சுவாமி சிலைகளை கொண்டு சுமார் 200 வருடங்களுக்கு மேலாக அனைத்து சாதியினரும் வழிபடும் வகையில் திறந்த வெளியில் அமைந்துள்ளது. மேற்படி கோவில்களில் திங்கள், வெள்ளி, அம்மாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் பூஜை நடப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 06.10.2021-ம் தேதி மலையடிவாரத்தில் உள்ள பெரியாசாமி கோவிலில் சுட்ட மண்ணால் ஆன சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டதாக பூசாரி ரெங்கநாதன் தெரிவிக்க கோவில் நிர்வாக எழுத்தர் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் 08.10.2021-ம் தேதி சிறுவாச்சூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெரியாண்டவர் கோவிலில் உள்ள பெரியாண்டவர் சிலை மற்றும் பரிவார சிலைகள் உடைக்கப்பட்டு, பின்னர் சித்தர் கோவிலில் உள்ள மயில் சிலையை உடைத்த போது, சித்தர் கோவில் பூசாரி ராஜா என்பவர் சிலையை உடைத்து கொண்டிருந்த நாதன் @ நடராஜன், த/பெ வெங்கடகிருஷ்ணன், என்பவரை கையும், களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி எதிரி நாதன் (எ) நடராஜன், த/பெ வெங்கடகிருஷ்ணன், காநாட்டான்புலியூர், கடலூர் மாவட்டம் என்பவரை விசாரணை செய்ததில், அவர் அவரது கிராமத்தில் உள்ள பதஞ்சலீஸ்வர் கோவிலிலிருந்த சுவாமி சிலைகளை அப்புறப்படுத்தி, சுவாமி சிலைகளுக்கு அடியிலிருந்த மந்திரம் செய்யப்பட்ட உலோகத்தலான மந்திர தகடுகள் மற்றும் உலோக காசுகளை வைத்திருந்தால் நல்லது நடக்கும் என்ற காரணத்தினால், சிலைகளை அப்புறப்படுத்தி மேற்படி உலோகத்தலான மந்திர தகடுகள் மற்றும் காசுகளை எடுத்து கொண்டதாக விசாரணையில் தெரிய வருகிறது.

அதேபோல் சிறுவாச்சூர் பெரியாண்டவர் கோவில் மற்றும் சித்தர் கோவிலில் உள்ள சிலைகளை உடைத்து நகர்த்தி அதனடியிலிருந்த உலோக காசுகளை எடுத்துள்ளார். மேற்படி காசுகள் மற்றும் உலோக தகடுகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 08.10.2021-ம் தேதி எதிரி நாதன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் 17.10.2021-ம் தேதி நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 27.10.2021-ம் தேதி செங்கமலையார் கோவிலில் 11 சிலைகளும், பெரியசாமி கோவிலில் 6 சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மீண்டும் 08.11.2021-ம் தேதி மலையடிவாரத்திலிருக்கும் பெரியசாமி கோவில், பெருமாள் கோவில், செங்கமலையார் கோவில்களில் உள்ள குதிரை சிலைகள், பொன்னுசாமி சிலை, ஆஞ்சநேயர் சிலை ஆகியவை சேதப்படுத்தப்பட்டதாக கோவில் நிர்வாகம் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.
இந்நிலையில் மேற்படி சுவாமி சிலைகளை சேதப்படுத்திய எதிரியை கண்டுபிடிப்பதற்காக, குன்னம் காவல்நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு எதிரியை தேடி வந்த நிலையில், 09.11.2021-ம் தேதி இரவு 10.30 மணிக்கு, பெரியசாமி கோவிலில் உள்ள சுவாமி சிலைகளை ஒருவர் சேதப்படுத்திக் கொண்டிருப்பதாக, பெரியசாமி கோவிலில் இருந்த இரவு காவலர்கள் தகவல் தெரிவிக்க, தனிப்படை காவல் அதிகாரிகள் சம்பவ இடம் சென்று மேற்படி நபரை பிடித்து, விசாரித்தபோது அவர் ஏற்கனவே பெரியசாமி, பெரியாண்டவர், சித்தர் கோவில் சிலைகளை உடைத்த நாதன் (எ) நடராஜன் என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்து விசாரித்த போது, 42 வயதான, நாதன் (எ) நடராஜன், தெலுங்கு பிராமண வகுப்பைச் சார்ந்தவர் என்றும், திருமணம் ஆகாதவர் என்றும், இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா ஆகியோர்கள் உடன் பிறந்துள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு தாய், தந்தையர் இருவரும் முன்பு இறந்துவிட்டனர். இவர் MBA வரை படித்துள்ளார்.

சென்னையில் தங்கி கணிப்பொறி பழுது பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது குல தெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன். தனக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை எனவும், தனது எதிர்காலம் சூனியமாகிவிட்டது எனவும், குல தெய்வம் தனக்கு எதுவும் நல்லது செய்யவில்லை எனவும், கோபம் கொண்டு மேற்படி குல தெய்வ கோவிலுக்கு சொந்தமான, மலையடிவராத்தில் தனியாக உள்ள உப கோவில்களில் உள்ள சிலைகளை இரும்பு கம்பி கொண்டு சேதப்படுத்தியது அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் வாயிலாக தெரியவந்தது.

மேலும் மேற்படி மலைக்கோவில்கள் அமைந்துள்ள பகுதிகளில் மின் இணைப்புடன் கூடிய விளக்குகள் அமைக்கவும், நிரந்தரமாக காவலர்கள் தங்கி பாதுகாப்பு அலுவல் புரிய புறக் காவல் காப்பு அறை அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!