Small grain snack shop in Perambalur; MLA Prabhakaran inaugurated!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சிறுதானிய சிற்றுண்டி விற்பனை வளாகத்தை எம்.எல்.ஏ பிரபாகரன், கலெக்டர் கற்பகம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு உடலுக்கு நலம் தரும் சிறுதானிய உணவு வகைகளை பொதுமக்களிடையே கொண்டுசேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், சார்பில், சிறுதானிய ஆண்டினை (2023-24) முன்னிட்டு, பொதுமக்கள் மத்தியில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சிறுதானிய உணவு பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தவும், இந்திய வேளாண்மையில் முதன்மையாக விளங்க கூடிய சிறுதானியங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யவும் தொடர்ந்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பயன்பெறும் வகையில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் சிறுதானிய சிற்றுண்டி அங்காடியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அங்காடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள் தயார் செய்த சிறுதானிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் அரசு பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.