Small onion at Rs. Farmers protest in Perambalur demanding government procurement for 40!
உழவர் தலைவர் நாராயணசாமியின் 99வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது. பின்னர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கரும்பு டன் ஒன்றிற்கு 4000 ரூபாய் விலையாக வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை மாதம் ஒருமுறை கணக்கீடு செய்து அதற்கான மின் கட்டண தொகையை வசூல் செய்ய வேண்டும். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையால் தமிழகத்திலேயே அதிகப்படியாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். எனவே மத்திய அரசு சின்ன வெங்காயத்திற்கு கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து மத்திய அரசின் நுகர்வோர் நலத்துறையின் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்காயத்திற்கு ஏற்றுமதி குறியீட்டு எண் சின்ன வெங்காயத்திற்கும், பெரிய வெங்காயத்திற்கும் ஒன்றாக உள்ளதால் சின்ன வெங்காயத்திற்கு என தனி குறியீட்டு எண் வழங்கி மத்திய அரசு சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியாலும் படைப்புழு தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மக்காச்சோளப் பயிர்கள் குறித்து அரசு கணக்கெடுப்பு நடத்தியும் இதுவரை நிவாரணத் தொகையை தமிழக அரசு அறிவிக்கவில்லை. மக்காசோளம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனே நிவாரணத் தொகையை வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் பட்டா, பிறப்புச் சான்று ,இறப்புச் சான்று ,வாரிசு சான்று இதுபோன்ற பல்வேறு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்போர்களுக்கு வருவாய் துறையின் மக்கள் சாசனம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.எனவே சான்றிதழ்களை காலக்கெடுவுக்குள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு நில மோசடியில் ஈடுபடுபவர்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட பதிவாளரே மோசடி ஆவணத்தை ரத்து செய்யும் வகையில் கொண்டு வந்த சட்டத்தை, நீதிமன்றத்தை காரணம் காட்டி அரசு நிறுத்தி வைத்துள்ளதை மீண்டும் செயல்படுத்தி நில மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்பவர்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வெங்காயத்தை தலையிலும், மக்காச்சோளத்தை மாலையாகவும் கட்டிக் கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வி. நீலகண்டன்,
மாவட்ட பொருளாளர் ஏ.மணி உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.