Snow haze in many areas of Perambalur: motorists are suffering; Happy people
பெரம்பலூர் நகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் இன்று காலை பனி மூட்டம் சூழ்ந்து, குளிர் பிரதேசங்களில் நிலவுவது போன்று சாலைகள் ரம்மியமாக காட்சியளித்தது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசி வரும் நிலையில் இன்று அதிகாலை முதல் 8 மணி வரை பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சூழ்ந்தது.
மேலும் சூரியன் உதயமாகியும் வானில் வெளிச்சம் தெரியாமல் சூரியன் பகல் நிலவு போன்று காட்சி தந்தது பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
இதன் காரணமாக சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்குள்ளானதால் அவர்களது வாகனங்களில் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றனர்.
இதனிடையே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தளங்களில் நி லவும் பனி மூட்டத்தை போன்று பெரம்பலூர் நகரில் சாலைகளையும், கட்டிடங்களையும், வீடுகளையும் பனி மூட்டம் சூழ்ந்து எதிரே நிற்பவர் கூட தெரியாத அளவிற்கு நகர் முழுவதும் ரம்மியமாக காட்சி தந்ததை பொது மக்கள் உள்ளிட்ட பலரும் ரசித்து விளையாடியதோடு, செல்போனில் செல்பி எடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.