Perambalur District Special Camp for differently abled: 10 days in all panchayats. Collector Info!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயற்படுத்தப்பட்டுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின் அரசாணை (நிலை) எண் 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அ.தி.1) துறை, நாள் 25.06.2012-ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டுவருகிறது.
மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2வது செவ்வாய் கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் இரு மாதங்களுக்கு ஒருமுறை செவ்வாய் கிழமை திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெரம்பலூர் அவர்கள் முன்னிலையில் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகின்ற மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறுமாறு, பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பபில் தெரிவித்துள்ளார்.