Special Camp to Link Aadhaar Number with Voter Card: Perambalur Collector Info!
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வழங்குவதற்காக படிவம்-6பி என்ற புதிய படிவம் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் எண் இணைக்கும் பணியானது 01.08.2022 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியினை விரைவுபடுத்துவதற்காகவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி எதிர்வரும் நாளை பிப்.25 ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இச்சிறப்பு முகாமில் வாக்காளர்கள் தாமாக முன்வந்து படிவம்-6பி இல் தங்கள் ஆதார் எண்ணினை பூர்த்தி செய்து தங்களது பகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளில் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை வாக்குசாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக தாக்கல் செய்வதன் வாயிலாக இணைத்துக்கொள்ளலாம்.
எனவே வாக்காளர்கள் இச்சிறப்பு முகாமினை முழுமையாக பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணினை தாமாகவே முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளுமாறும் இப்பணியினை விரைவாக முடித்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென, பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் தெரிவித்துள்ளார்.