திட்டக்குடி (கடலூர் ) : திட்டக்குடி பேருந்து நிலையத்தில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு வியாபாரம் செய்வதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் கடலூர் – திருச்சி மாநில நெடுஞ்சாலையில் தாலுக்கா தலைநகரமாக உள்ள திட்டக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, அரியலூர், பெரம்பலூர், பழநி, உட்பட்ட தென் மாவட்டங்களுக்கும், சிதம்பரம், விருத்தாசலம், சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. தினமும் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட எல்லைப் பகுதி மற்றும் திட்டக்குடி பகுதி மக்களும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும், காய்கறி மற்றும் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும் திட்டக்குடிக்கு வந்து செல்கின்றனர்.
பேருந்து நிலைய வளாகத்தில் தனியார் வாகனங்களும் தள்ளுவண்டிகளும் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சீனிவாசன் பேருந்து நிலைய வளாகத்தை நேரில் ஆய்வு செய்தனர். அங்கு தள்ளுவண்டி வணிகர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து திருக்குளம் மற்றும் பொன்னுசாமி நகர் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வண்டிகளை நிறுத்தி வணிகம் செய்யும்படியும் அவ்வாறு இடையூறு ஏற்பட்டால் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதையொட்டி, அனைத்து தள்ளுவண்டி வணிகர்களும் முழுமையாக ஒத்துழைக்கவும் போக்குவரத்துக்கு எந்த இடையூறு இன்றி செயல்படவும் உறுதியளித்தனர்.