Speech competitions for college students on behalf of the State Minorities Commission: Initiated by the Collector at Perambalur.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. அதனை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:
இன்று நடைபெறுவது வெறும் பேச்சுப் போட்டியல்ல, உங்களுடைய சிந்தனையையும், ஆர்வத்தையும் மற்றும் கலந்துரையாடலையும் தூண்டக்கூடிய ஒரு சக்தி. எனவேதான் அரசு இதனை முன்னெடுத்துள்ளது. ஆகையால் போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட அளவில் முதல் 3 இடங்கள் பிடிப்பவர்களை மாநிலத்தில் நடைபெறும் பேச்சுப் போட்டிக்கு அழைத்துச் சென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் பரிசுகள் வழங்கப்படும். இன்று நடைபெறும் போட்டியில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 21 தலைப்புகளை படித்தாலே என்னென்ன விஷயங்களை நீங்கள் உங்களது சிந்தனைக்கு கொண்டு வர முடியும் என்று தெரிந்து கொண்டுள்ளேன்.
உங்களுடைய வேலை சம்மந்தப்பட்ட திறன்களை நீங்கள் கல்லூரியிலும், கல்லூரிக்கு வெளியிலும் வளர்த்துக் கொள்ள தேவையான அனைத்து முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்;. கல்லூரி முடித்த பிறகு நீங்கள் ஒரு பணியில் சேர்ந்து ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது என்பது ஒரு சவாலாக உள்ளது. அந்த சவால்களை எதிர்கொள்ள தேவையான அனைத்து திறமைகளையும் கல்லூரிக்குள்ளேயே உங்கள் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் உங்களுடைய நண்பர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடி தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திற்கென சில பெருமைகள் உள்ளது. நம் பெரம்பலூர் மாவட்டம் உலகளவில் பல்லுயிர் எச்சப்படிவங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டமாக உள்ளது. புதைப்படிவங்கள் இருப்பதை சாதரணமாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. இங்குள்ள புதைப்படிவங்கள் கிரிடீசியஸ் பீரியடு என்ற தொண்மையான (கிட்டத்தட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட) காலகட்டத்திலேயே படிவமான பொருட்களாக உள்ளது. எல்லா பாரம்பரியத்தை விடவும் அதிகமான தொண்மை வாய்ந்த பாரம்பரியமிக்க மாவட்டமாக உள்ளது. அதை பறைசாற்றும் வகையிலும் அதனை பற்றி மக்கள் குறிப்பாக மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் சாத்தனூர் கல் மர பூங்காவில் இது போன்ற பல்லுயிர் எச்சங்கள் எந்த ஆண்டு, எந்த பகுதியில் வந்திருக்க வாய்ப்புள்ளது என்பது குறித்தும் அது எப்படி அங்கு வந்தது என்பது குறித்தும் அறிவியல்பூர்வமாக தரவுகளை படக்காட்சி மூலமாக காட்சிப்படுத்தியுள்ளோம்.
அப்பூங்காவினை ஒரு கல்வி மையமாக உருவாக்கியுள்ளோம். மாணவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கல்வி மையத்தினை சென்று பார்வையிட வேண்டும். உங்களுக்கு புதிய பரிமானத்தை காட்டும். தொண்மை என்பதை சுமார் 2,000 வருடங்கள், 5,000 வருடங்கள் என கேள்விபட்டிருப்போம். ஆனால் 10 கோடி வருடங்கள் தொண்மை கிடைப்பது என்பது மிகவும் அரிதாகும். அது நம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. அதற்குண்டான சிறு முயற்சிகளை நம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளோம். எனவே மாணவர்களாகிய நீங்கள் அப்பூங்கா கல்வி மையத்தினை சென்று பார்வையிடுவதால் அது உங்களுக்கு மட்டுமல்லாமல் அங்கு பணிபுரியும் மகளிர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என பேசினார்.
போலீஸ் எஸ்.பி மணி, மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோவர் கல்விக்குழும துணை தாளாளர் ஜான் அசோக் வரதராஜன், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி முதல்வர் மு.ஜெயந்தி, துணை முதல்வர் அ.மகேந்திரன், தமிழ் பேச்சுப்போட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹாஜாகனி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா.ரமணகோபால், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் க.சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்:
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகளை ந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கலெக்டர், வெங்கடபிரியா தொடங்கி வைத்த போது எடுத்தப்படம். அருகில் போலீஸ் எஸ்.பி மணி, மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.