நாளுக்கு நாள் பெரம்பலூர் நகரம் அடையும் வளர்ச்சிக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரின் பிரதான சாலைகளில் பள்ளி கல்லூரி, பேருந்துகள், ஆட்டோக்கள் உட்பட பொதுமக்கள் வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.
பெரம்பலூர் நகர்ப்பகுதி மற்றும் துறையூர் சாலை, ஆத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் நலன் கருதி பல்வேறு இடங்களில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகத்தடையில் தீட்டப்ட்டுள்ள வர்ணங்கள் அழிந்து விட்டது.
சாலைக்கும், வேகத்தடைக்கும் வித்தியாசம் தெரியாததால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
மேலும், வேகத்தடை அருகே உள்ள அறிவிப்பு பலகைகள் பல்வேறு இடங்களில் தெரியாத அளவிற்கு பிளக்ஸ் பேனர்கள், தட்டிகள் வைத்து மறைக்கப்பட்டு உள்ளது.
வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அவதிப்படுகின்றனர்.
நகரின் முக்கிய பகுதியான பழைய பேருந்து நிலையம், கனராவங்கி, காமராஜ் வளைவு, சங்குபேட்டை விளாமுத்தூர் சாலை பிரிவு ஆகிய பகுதியில் சாலையின் இருபுறமும் மணிக்கணக்கில் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போலீசாரும் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனர். எனவே பெரம்பலூர் நகர பகுதிகளில் உள்ள வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசி புதுப்பித்து அறிவிப்பு பலகைகளை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.
மேலும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு கனரா வங்கி மற்றும் சங்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேவையான போக்குவரத்து காவலர்களை நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினர் மற்றும், நகராட்சி அதிகாரிகள் , நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.