Sprouting leaves floating in churches
ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் ஜெருசலேம் வீதிகளில் கழுதை மீது ஏறி ஊர்வலமாக சென்றார்.
குருத்தோலை மற்றும் மரக்கிளைகளை பிடித்து அவரை வரவேற்றனர். அதை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த குருத்தோலை ஞாயிற்றை முன்னிட்டு இன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது.
ஏசு பேராலயங்களில் தலைமைகுரு தலைமையில் உதவி குரு தனசிங் முன்னிலையில் குருத்தோலை பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் குடும்ப குடும்பமாக கலந்து கொண்டனர்.
குருத்தோலை பவனியில் கிறிஸ்தவர்கள் தாவீதின் குமாரனுக்கு ஓசானா என்று கோசமிட்டபடி கைகளில் குருத்தோலை ஏந்தியவாறு சென்றனர்.
வருகிற 13-ஆம் தேதி பெரிய வியாழன் ஆகும். இயேசு தன்னுடைய சீடர்களுடன் கடைசியாக இராப்போஜனம் உண்டதை நினைவு கூரும் விதமாக பெரிய வியாழனாக அனுசரிக்கப்படுகிறது.
விருந்தினை அடுத்து வருகிற 14-ஆம் தேதி பெரிய வெள்ளிக்கிழமையாகும். அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் மும்மணி தியான ஆராதனை நடக்கிறது. இந்த மும்மணி ஆராதனையில் இயேசு சிலுவையில் சொன்ன 7 வசனங்களின் பேரில் செய்தி கொடுக்கப்படுகிறது. இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான ஆராதனையாகும்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ஆம் நாள் உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக அனுசரிக்கிறார்கள். இந்த ஈஸ்டர் பண்டிகை வருகிற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.