State Planning Committee member inspects government projects and development works in Perambalur with officials

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஆபிசில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளர்ச்சித்திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில திட்டக்குழு உறுப்பினரும், செயலருமான அணில்மேஷ்ராம் தலைமையில் மாவட்ட கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் நடந்தது.

கூட்டத்தில், மாவட்டத்தில் தமிழக அரசால் வேளாண்மைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விதைகள் மற்றும் உரங்களின் நிலவரம், இருப்பு நிலை, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இடுபொருட்கள், இயந்திர தளவாடங்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவு, எய்திய அளவு, நிலுவைக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கூட்டுறவுத்துறையின் சார்பில் குறுகிய, மத்திய காலக்கடன் வழங்கப்பட்ட விபரங்கள், வேளாண் கடனுதவி வழங்கப்பட்ட விபரங்கள், பொது சேவை மையங்கள், கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்கள், பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கோழி வளர்ப்பு மற்றும் பால் பண்ணை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள், நபார்டு வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சமூக நலத் துறையின் சார்பில் வழங்கப்பட்ட திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மதிய உணவு வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் செயல்பாடுகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறையின் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்தும், மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேரு நிதியுதவித்திட்டம், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்காக வந்த நபர்களின் எண்ணிக்கை, காய்ச்சலினால் உள்நோயளிகளாக சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை, மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத்திட்டம், பொதுப் பணித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிமராமத்து திட்டப்பணிகள், புதிய கட்டுமானப் பணிகள் போன்ற அனைத்துத்துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டது. தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். ஒவ்வொரு துறையினரும் மற்ற துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து ஒருமித்து செயல்படும் போது அரசின் திட்டங்களின் பயன்கள் விரைந்து பயனாளிகளை சென்றடையும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சீரான முறையில் குடிநீர் வழங்கிட வேண்டும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்றிட வேண்டும் என மாநில திட்டக் குழு உறுப்பினர் அணில் மேஷராம் தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜி.கே.லோகேஷ்வரி, மகளிர் திட்ட அலுவலர் எம்.இராஜமோகன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ச.கருணாநிதி, நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன் உட்பட அனைத்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!