ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகின்றது குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையினை உருவாக்கிடும் விதமாக தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தொழிலாளர் நலத் துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையினர் இணைந்து கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர;.
இதுகுறித்து தொழிலாளர் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கடைகள், நிறுவனங்கள், பணிமனைகள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலையோரக்கடைகள் உள்ளிட்ட 178 இடங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப் படுகின்றார்களா என்று தொழிலாளர் நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர;.
இந்த ஆய்வின்போது அனைத்துக்கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு கடையிலோ, நிறுவனத்திலோ, உணவகங்களிலோ அல்லது வேறு எந்த தொழில்களிலோ பணியமர்த்தக்கூடாது என்றும், அப்படி பணியமர்த்துவது சட்டப்படி குற்றம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அவ்வாறு குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துவோர் மீது வழக்கு தொடரப்பட்டு ரூபாய் 20,000 அபராதம் விதிக்கவோ அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கவோ அல்லது இரண்டும் விதிக்கவோ நேரிடும் என்றும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது தொழிலாளர் துணை ஆய்வாளர் , உதவி ஆய்வாளர், முசிறி தொழிலாளர் உதவி ஆய்வாளர் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர;.
12.6.2016 அன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாளை 10.6.2016 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த உறுதிமொழி எடுக்க உள்ளனர்.
மேலும், 13.6.2016 அன்று குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பாலக்கரை பகுதியில் சுமார் 500 பேர்பங்கேற்கும் மனிதசங்கிலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது, என பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.