Storm Damage: Postponed Competition for Forest Service Jobs PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழக அரசின் வனத்துறைகளில் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வுகள் வரும் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 30-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.

கஜா புயலால் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்வுகளை திட்டமிட்ட தேதியில் நடத்துவது ஏராளமான மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழக வனத்துறையில் 300 வனவர்கள், 726 வனக்காப்பாளர்கள், 152 ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர்கள் என 1178 பணியிடங்களை தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை பெறப் பட்டன. இப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் ஆன்லைன் முறையில் வரும் 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளும் நேற்று வெளியிடப்பட்டிருக்கின்றன. திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளை அறிவித்த தேதியில் நடத்த வேண்டும் என்ற தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தின் அக்கறை பாராட்டத்தக்கது. அதேநேரத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்வுகளை நடத்துவதற்கு முன் அதற்கான சூழ்நிலைகள் அனைத்தும் சரியான உள்ளனவா? என்பதை தேர்வுக்குழுமம் ஆராய்ந்து உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தேர்வுக் குழுமம் தவறிவிட்டது வருத்தமளிக்கிறது.

காவிரிப் பாசன மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளுக்காக விண்ணப்பித்துள்ள சுமார் 3 லட்சம் பேரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இத்தேர்வுகளுக்காக அவர்கள் ஓரளவு தயாராகியிருந்தனர் என்றாலும் கஜா புயல் தாக்குதலால் அவர்கள் பொருளாதார அடிப்படையிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் அவர்கள் இப்போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுவது சாத்தியமற்றதாகும்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடப்பு வாரத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளும், பாரதிதாசன் பல்கலைகக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களால் பல்கலைக்கழகத் தேர்வுகளிலேயே பங்கேற்க முடியாது எனும் போது, போட்டித் தேர்வுகளில் அவர்களால் எவ்வாறு பங்கேற்க முடியும்? என்று வனச்சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சிந்தித்திருக்க வேண்டும். ஏனோ அந்த அமைப்பு அவ்வாறு செய்வதற்குத் தவறி விட்டது.

வழக்கமாக தமிழகத்தில் போட்டித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதில் இருந்து 90 நாட்கள் கழித்து தான் தேர்வு நடத்தப்படும். ஆனால், வனத்துறை பணியிடங்களைப் பொறுத்தவரை அறிவிக்கை வெளியிடப்பட்ட 40-ஆவது நாளிலேயே போட்டித் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாளில் இருந்து பார்த்தால் தேர்வுக்கு மொத்தம் 20 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராக இந்த அவகாசம் எந்த வகையிலும் போதாது.

அதுமட்டுமின்றி, தருமபுரி மாவட்டத்திலிருந்து இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த நூற்றுக்கணக்கானோருக்கு 250 கி.மீ தொலைவில் உள்ள கோவை நகரில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு நாளன்று காலையில் தர்மபுரியிலிருந்து புறப்பட்டு கோவையில் உள்ள தேர்வு மையத்துக்கு செல்வது சாத்தியமற்றது. இவ்வளவு குழப்பங்களுடன் வனத்துறை பணியிடங்களுக்கான போட்டித்தேர்வை அறிவிக்கப்பட்ட நாளிலேயே நடத்த தேர்வுக்குழுமம் துடிப்பது ஏன்? எனத் தெரியவில்லை.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த போட்டித் தேர்வர்களின் நலன் கருதி இம்மாதம் 25-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள வனத்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தேர்வுக் குழுமம் ஒத்தி வைக்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு, அனைத்து தேர்வர்களுக்கும் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வுக்கூடம் ஒதுக்கி வனத்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்த வனச்சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் முன்வர வேண்டும், என தெரவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!