Storm-hit regions by the PMK on behalf of the assistance provided to Rs 1 crore! Anbumani MP
பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :
காவிரி பாசன மாவட்டங்களை கஜா புயல் தாக்கி ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில், அப்பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. ஒட்டுமொத்த காவிரி டெல்டாவும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் உட்புறங்களில் உள்ள கிராமங்களில் நிவாரணப் பணிகளே இன்னும் தொடங்கப்படவில்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மையாகும்.
கஜா புயலின் பாதிப்புகள் வரலாறு காணாத வகையில் இருக்கும் நிலையில், அதன் தீவிரத்தை தமிழக ஆட்சியாளர்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை.
பேரிடர் சூழலை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. அதனால் தான் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் முழுவீச்சில் தொடங்கப்படவில்லை.
பேரிடர் காலங்களில் முதன் முதலில் மேற்கொள்ள வேண்டியது மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தருவதும், வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை உருவாக்குவதும் தான். இந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றினால் மக்களிடையே சற்று நிம்மதி ஏற்படும். அதன்பின்னர் மக்களின் ஒத்துழைப்புடன் நிவாரணப் பணிகளை மிகவும் விரைவாக நிறைவேற்றி முடிக்க முடியும்.
ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வசதிகளைக் கூட ஆட்சியாளர்கள் செய்து கொடுக்காத நிலையில் அதைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவதும், அதற்கு பயந்து ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தப்பி ஓடுவதுமாகத் தான் பொழுதுகள் கழிந்து கொண்டிடுக்கின்றன.
கஜா புயலின் பாதிப்பு நாம் அனைவரும் நினைத்ததை விட மிகவும் அதிகமாக இருக்கிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் இன்னும் சென்று பார்க்காத பகுதிகள் ஏராளமாக உள்ளன. அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லி மாளாதவை.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவிக்கும் அனைத்துத் துயரங்களுக்கும் தமிழக அரசு தான் காரணம் ஆகும். தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் நிலைமையை மிகவும் எளிதாக சமாளித்திருக்க முடியும். கேரளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட போது அதன் பாதிப்புகளை பிணராயி விஜயன் தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக கையாண்டது.
அமெரிக்காவில் கடந்த 2005ஆம் ஆண்டு கேத்ரினா புயல் தாக்கியது. அந்தப் புயலில் 1836 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டாலும், உண்மையிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட பல மடங்கு ஆகும். அதனால் ஏற்பட்ட சேதம் பல லட்சம் கோடி ஆகும். அமெரிக்காவின் 19 மாநிலங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
ஆனால், அமெரிக்க அரசு மொத்தம் 6 நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலையை ஏற்படுத்தியது. ஆனால், தமிழக அரசோ மொத்தம் 4 மாவட்டங்களில் மட்டும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முடியாமல் தவிக்கிறது. இது தமிழக அரசின் தோல்வியாகும்.
புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளை நான் இன்று பார்வையிட்டேன். அங்கு நான் கண்ட காட்சிகள் மிகவும் கவலையளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை விட சமூக சேவை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் தான் அதிக அளவில் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சிடைச் சேர்ந்த குழுவினர் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதுடன், மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளையும் வழங்கினர்.
ஆனாலும், கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் அதிக உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே, பாட்டாளி மக்கள் கட்சி, பா.ம.க. இளைஞரணி, மாணவரணி, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் கஜா புயல் பாதித்த இடங்களுக்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசும் ராணுவத்தை அழைத்து அவர்களின் உதவியுடன் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.