strike; 4,081 teachers did not go to work in Namakkal district.
ஜாக்டோ-ஜியோ அழைப்பு விடுத்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்டத்தில் 53.45 சதவீத ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதனால் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டது.
1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். 2003 முதல் 2004 மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறு துறை தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆசிரியர்கள் ஆதரவு:
இந்த போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. மாவட்டத்தில் உள்ள 1,363 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7,634 ஆசிரியர்கள் பணியாற்று வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. 3,360 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். 193 ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடுப்பில் இருந்தனர். பணிக்கு வராதவர்களின் சதவீதம் 53.45 சதவீதம்.
அதே சமயத்தில் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் 13,043 அரசு ஊழியர்கள் உள்ளனர். இதில் 432 பேர் மட்டுமே பணிக்கு செல்லவில்லை.
போராட்டத்தை தொடர்ந்து பளளிகளில் செய்யப்பட்டிருந்த மாற்று ஏற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.உஷா தெரிவித்தது, மாவட்டத்தில் எந்த ஒரு பள்ளியும் மூடப்படவில்லை. பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளிகளில் பயிற்சிபெறும் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டது என்றார்.
பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தது என்றாலும் கற்பித்தல் பணி முழுமையாக பாதிக்கப்பட்டது என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.