Striking education scholarship scam: CBI Must investigate! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பது மத்திய அரசு நடத்திய தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த ஊழல் நடத்தப்பட்ட விதமும், அதற்கு ஆட்சியாளர்கள் துணை போனதும் அதிர்ச்சி அளிப்பவையாகும்.

இந்தியா முழுவதும் உயர்கல்வி கற்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலை & அறிவியல் பட்டம் முதல் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகள் வரை, மாணவர்கள் படிக்கும் படிப்புக்கு ஏற்ப ஆண்டுக்கு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை உதவித்தொகையாக வழங்கப் படுகிறது.

பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்; ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த உதவித்தொகை பெறுவதற்கான நிபந்தனை ஆகும். மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும் இந்த உதவித்தொகை, போலியான பெயர்களில் பல கல்லூரிகளுக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2012&ஆம் ஆண்டு முதல் 2017&ஆம் ஆண்டு வரை இந்த உதவித்தொகை பெற்றவர்களின் 3.5 லட்சம் பேரின் பிறந்த தேதியே குறிப்பிடப்படவில்லை. இந்த உதவித்தொகையை பெற்றவர்களில் 4,800 பேர் 14 வயதுக்கும் குறைவானவர்கள். இந்த வயதில் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெற்றிருக்க முடியாது எனும் நிலையில், அவர்களுக்கு பட்டப்படிப்புக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் தவிர 55 வயதைக் கடந்த 2100 பேருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்புகளில் சேர அதிகபட்ச வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வு பெறும் வயதில் இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவித்தொகை வழங்கப்பட்டது எனத் தெரியவில்லை.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் கல்லூரியில் சேருவதற்கு முன்பே உதவித்தொகை வழங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. 450 பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் 4 முறை கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர். பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது முதல் ஒப்புதல் அளிப்பது வரை அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் முறையில் தான் மேற்கொள்ளப்படுகிறது. கல்லூரிகளில் தொடங்கும் இந்த நடைமுறை பல்வேறு கட்டங்களில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளால் சரிபார்க்கப்படுகிறது. ஆனால், இதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கல்லூரிகள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் கூட்டணி அமைத்து இந்த ஊழலை செய்திருக்கின்றனர்.

மத்திய அரசு வழங்கும் இந்த கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக தமிழகத்திலிருந்து அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அது தொடர்பான கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்திய போது இந்த ஊழல் அம்பலமாகியுள்ளது.

முதற்கட்ட மதிப்பீட்டின்படி ரூ.20 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் முழு ஆதரவுடன் தான் இந்த ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் எவ்வாறு செய்யப்படுகிறது என்பது குறித்த உண்மைகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியவையாகும்.

பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெரும்பாலும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் தான் நடைபெற்றுள்ளன. பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் பட்டியலின& பழங்குடியின மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்புவதில்லை. இதனால் அந்த இடங்கள் மூலம் கல்லூரிகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்காமல் போய் விடும். இந்த இழப்பை ஈடுசெய்ய நினைக்கும் கல்லூரி நிர்வாகங்கள் பட்டியலின& பழங்குடியின மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதாகக் கூறி கல்லூரியில் சேர்த்துக் கொள்வார்கள். பின்னர் அவர்களின் பெயரில் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் தொகை முழுவதையும் நிர்வாகமே எடுத்துக் கொள்ளும். மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை என்பது அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை விட அதிகம் என்பதால், கல்லூரி நிர்வாகங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

கல்லூரியில் சேர தகுதியான மாணவர்கள் கிடைக்காத சூழலில் 14 வயதுக்கும் குறைவானவர்கள், 55 வயதுக்கும் அதிகமானவர்களை போலியாகக் கணக்குக் காட்டி கல்வி உதவித்தொகையை பெற்று தனியார் கல்லூரிகள் ஊழல் செய்துள்ளன. இதற்கு அதிகாரிகளும், அமைச்சர்களும் ஆதரவு தருவதால், ஊழல் செய்யப்படும் தொகையில் ஒருபகுதி அவர்களுக்கு கையூட்டாக தரப்படுவதாக கூறப்படுகிறது.

பட்டியலின மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகையை முறைகேடு செய்து சுருட்ட அவர்களின் நலனை உறுதி செய்ய வேண்டிய ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் துணை போயிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஊழல் குறித்த அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் வசதியாக கல்வி உதவித் தொகை ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!