பெரம்பலுார் : பெரம்பலுாரிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களளூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் மென்பொறியாளராகவும், அலுவலகங்களிலும், சட்டக் கல்லுாரிகளில் எல்.எல்.பி., உள்ளிட்ட பட்டப் படிப்பு பயில்கின்றனர்.
இவர்கள் தற்போது பெரம்பலுாரிலிருந்து சேலம் சென்று அல்லது திருச்சி சென்று அங்கிருந்து ரயில் மூலமே அல்லது பஸ் மூலமோ பெங்களூரு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் போது பல பேருந்துகளில் மாறி மாறி செல்ல வேண்டி உள்ளது.
இது மட்டுமில்லாமல் பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகளும் தானியங்கள், தக்காளி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை கொள்முதல் செய்ய வாரந்தோறும் பெங்களூர் சென்று வருகின்றனர்.
மேலும், பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் பெங்களூருவில் பல்வேறு பணிகளில் உள்ளனர். இதனால் பெரம்பலுாரிலிருந்து பெங்களூருக்கு செல்வோரின் எண்ணிக்கை நாள் அதிகரித்து வருகிறது.
சேலம் (ஆத்தூர்) , அரியலூர், மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் பெரம்பலுாரிலிருந்து பெங்களூருக்கு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டால் பயனடைவார்கள்.
எனவே பெரம்பலுாரிலிருந்து பெங்களூருக்கு அரசு பேருந்து இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.