Subsidized Loan for Adi Dravidias, Tribals Entrepreneurs: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக நிர்ணயிக்கப்பட்ட திட்டத் தொகை ரூ.3,00,000 லட்சத்தில் 30% அதாவது ரூ.90,000 மானியத் தொகையும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய மற்றும் அதிகபட்ச மானியத் தொகை சென்றடைய, ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30% அல்லது அதிகபட்சம் ரூ.2,25,000 இலட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்ட தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.3,75,000 இலட்சம் மானியம் விடுவிக்கப்படும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது.
மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடராக மற்றும் பழங்குடியினராக இருப்பின் விண்ணப்பதாரர் புகைப்படம், சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, ஜி.எஸ்.டி. பான்கார்டு, முகவரி சான்றுகளுடன் தாட்கோ இணையதளமான http://application.tahdco.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328 – 276 317, 94450 29470 ஆகிய தொலைபேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.