Subsidized solar pump sets for farmers: Perambalur Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசின் மானியம் மற்றும் 30 சதவீதம் ஒன்றிய அரசின் மானியம்) 2021-2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 2000 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ரூ. 43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நில நீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் (Safe Firka) இருத்தல் வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின்கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புக் கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தி பம்பு செட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள், இலவச மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு, இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும் போது சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.

வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள் கான்கீரிட் காரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள் நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட தொலைவிற்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். மேற்படி தொலைவு வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் பொழுது பொதுப்பணித் துறையின் தடையில்லா சான்றினை இணைத்திட வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் எளம்பலூர், தண்ணீர் பந்தலில் உள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை (அல்லது) மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு www.pmkusum.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தகவல்களை பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!