Subsidy to set up Poly Green House : Perambalur Collector Information!

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட செயலாக்கத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2023-24 ஆம் நிதியாண்டில் உத்தேச பொருள் இலக்கீடாக 7268 எண்கள்/எக்டர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.796.00 இலட்சம் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்படுவதுடன் மேலும், பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்திட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

பருவமில்லாத காலங்கள் மற்றும் ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடி மேற்கொண்டு வருமானத்தை பெருக்கிட பாதுகாக்கப்பட்ட சூழலில் தக்காளி, வெள்ளரி, குடைமிளகாய் போன்ற காய்கறி பயிர்களை பயிர் செய்திட பசுமைக்குடில் இனத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது.

பசுமைக்குடில் என்பது ஒளி ஊடுருவக்கூடிய பொருட்களால் கட்டமைக்கப்பட்ட கண்ணாடி வீடு போன்ற அமைப்பாகும். அங்கு தாவரங்கள் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்கின்றன.

ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு இருப்பதால், பருவத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், சந்தை ஏற்ற இறக்கங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சரியான முறையில் திட்டமிடுதலின் மூலம் உரிய சமயத்தில் தோட்டக்கலைப் பயிர்களான காய்கறி மற்றும் பூக்கள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து விளைபொருட்களுக்கு கூடுதல் இலாபம் ஈட்டலாம். பாதுக்காக்கப்பட்ட சூழலில் விளைவிக்கப்படுவதால் விளைபொருட்கள் கூடுதல் தரத்துடனும், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இன்றி காணப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் மற்றும் நீரில் கரையும் உரங்களைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம். நிலப்போர்வை பயன்படுத்தப்படுவதால் களைகளைக் கட்டுக்குள் வைப்பதுடன், நீர் ஆவியாதலை தடுத்து நீர்த்தேவையை குறைக்கவும் உதவும். ஒருங்கிணைந்த சாகுபடி முறைகளை கடைபிடிப்பதால் மகசூல் 5 முதல் 10% அதிகரிக்கும்.

இத்திட்டத்தில் 1000 ச.மீ. அளவுள்ள பசுமைக்குடில் அமைத்திட 50% மானியத்தில் அதிகபட்சமாக ரூ.4,67,500/- வழங்கப்படும். பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!