Sudden twist after 3 months in missing teachers case near Perambalur: Main culprit arrested!
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(44). இவர் வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இதேபோல் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தீபா(42) வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில வருடங்களாக நண்பர்களாக பழகிய இவர்கள் இருவரும், அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தீபா உள்ளிட்ட பலரிடம் நம்பிக்கையாக பேசிய வெங்கடேசன் பல லட்ச ரூபாய் பணத்தை வாங்கி திருச்சியில் உள்ள தனியார் சிட்பண்டு நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் தீபா, வெங்கடேசனிடம் கொடுத்த 22 லட்சம் ரூபாயை கடந்த சில மாதங்களாக திருப்பி கேட்டு வந்ததாகவும், கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி, வழக்கம்போல் வேலைக்குச் சென்ற தீபாவும் வெங்கடேசனும் பள்ளி வேலை நேரத்திற்கு பின்னர் வீடு திரும்பாமல் மாயமாகினர்.
இவர்கள் இருவரையும் அவர்களது குடும்பத்தார்கள் தேடி வந்த நிலையில், தீபாவை காணவில்லை என வி.களத்தூர் காவல் நிலையத்தில் அவரது கணவர் பாலமுருகனும், வெங்கடேசனை காணவில்லை என அவரது மனைவி காயத்ரி பெரம்பலூர் காவல் நிலையத்திம் புகார் கொடுத்திருந்தனர்.
இருபுகார்களின் பேரிலும் வழக்கு பதிவு செய்த போலீசார், தீபாவையும், வெங்கடேசனையும் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 11:30 மணி அளவில், கோவை பி ஒன் பெரிய கடை வீதி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் தீபா பயன்படுத்தி வந்த கார் 2 நாட்களாக கேட்பாரற்று நிற்பதாக, தீபாவின் கணவரான பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பெயரில் மங்களமேடு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான தனிப் படை போலீசார் நேற்று நள்ளிரவு கோயம்புத்தூருக்கு விரைந்து சென்று, பி ஒன் காவல் நிலைய போலீசார் உதவியுடன் காரை திறந்து பார்த்தனர். காரில் ரத்தக்கரை படிந்த நிலையில் ஒரு சுத்தியலும், உடைகளும், ஒரு கத்தியும், தீபாவின் தாலி, குண்டு, கொலுசு, ஏடிஎம் கார்டு மற்றும் வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்ததை கண்டெடுத்தனர்.
இதனால் தீபா ஒருவேளை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிற போலீசார் வெங்கடேசனின் உறவினர்களான ராஜா பிரபு, ஆனந்த் ஆகியோரையும், கோயம்புத்தூர் மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
பணம் கேட்டு கொடுத்த நெருக்கடியால் ஆத்திரமடைந்து தீபாவை வெங்கடேசன் கொலை செய்து, அவரது சடலத்தை பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளோ அல்லது கோயம்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் புதைத்திருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை நடத்தி வரும் போலீசார், ஆசிரியர் வெங்கடேசனை தேடி 3 தனிப்படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். இந்த வழக்கில் 2 எஸ்.எஸ்.ஐ-க்களும் சஸ்பெண்ட் ஆகினர்.
போலீசாருக்கு போதிய துப்பு துலங்காமல் சவாலாக இருந்தது. எதையும், செல்போன் டவர் மற்றும் சி.சி.டிவி கேமரா காட்சிகள் போதிய அளவிற்கு கிடைக்காததால் பெரும் சிரத்தை எடுத்து வழக்கை விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேசன் இன்று சென்னை அருகே செய்யப்பட்டுள்ளதாகவும், அவர், இன்று இரவு பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் ஸ்டேசனுக்கு அழைத்து வரப்படுகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்தப்படும் விசாரணையில் தீபாவின் கதி என்ன? என்ன ஆனார்? என்பது நாளை முழுவதுமாக தெரியவரும், உயிருடன் உள்ளாரா, அல்லது அவரை கொலை செய்து புதைத்து இருக்கிறாரா?, அவருடைய நகைகள் எங்கே? என்பது குறித்து பல வித கேள்விக்களுக்கான பதில் நாளை காலை விடியலில் தெரிய வரும்!!