Supreme Court bans opening Sterlite: Victory for Tamil Nadu PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த ஆணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்தும், அந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாலும் அந்த ஆலையை நிரந்தரமாக மூட கடந்த ஆண்டு மே 29&ஆம் தேதி தமிழக அரசு ஆணையிட்டிருந்தது. அதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க அனுமதி அளித்து கடந்த திசம்பர் 15&ஆம் தேதி ஆணையிட்டது. அத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடும்படி தமிழக அரசு பிறப்பித்த ஆணைக்கு தடை விதிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது என்பதால், அங்கு சென்று வழக்கு தொடரும்படி ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆணையிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இப்போது கூறியுள்ள இதே கருத்தைத் தான் இந்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தொடக்கம் முதலே தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஆலைக்கு ஆதரவாகவே இருந்தன. ஆலையை ஆய்வு செய்ய தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்ட போது, அதை ஆலை நிர்வாகம் கடுமையாக எதிர்த்தது. அதை பசுமைத் தீர்ப்பாயம் பொருட்படுத்தியிருக்கக் கூடாது. ஆனால், தீர்ப்பாயமோ பஞ்சாப் நீதிபதி ஒருவரை நியமிக்க முயன்று அவர் ஒப்புக்கொள்ளாத நிலையில், மேகாலய உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலை நியமித்தது.

பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட தருண் அகர்வால் குழு தொடக்கத்திலிருந்தே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தான் செயல்பட்டார். ஆலையை திறக்கும்படி பரிந்துரைக்க வல்லுனர் குழுவுக்கு அதிகாரம் இல்லை எனும் போதிலும், ஆலையைத் திறக்க அக்குழு பரிந்துரைத்தது. அதையும் பசுமைத் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டு ஆலையை திறக்க அனுமதி அளித்தது. அதை நிராகரித்துள்ள உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கை விசாரிக்கவே பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முக்கியத் திருப்பமாகும்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியும். நிம்மதியும் அடைந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள், குரல் கொடுத்த அரசியல்கட்சிகள் மற்றும் அமைப்புகள், ஆலையை மூட ஆணையிட்டதுடன் உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசு என ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். இது கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பாகும்.

அதேநேரத்தில் இந்தத் தீர்ப்பு தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்ட ஒன்று என்பதையும், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கத்திலிருந்து மீண்டும் விசாரிக்கபடவுள்ளது என்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும். உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடரும் போது ஆலை மூடப்பட்டதற்கான காரணங்களை ஆதாரங்களுடன் பட்டியலிடவும், வலிமையான வாதங்களை முன்வைக்கவும் தமிழக அரசு தயாராக வேண்டும். இந்த வழக்கில் தமிழகத்திற்கு ஆதரவாக வாதாடி நீதியை நிலைநாட்டிட, தலைசிறந்த சட்ட வல்லுனர்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாக தமிழக அரசு நியமிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!