Supreme Court verdict on 7 people is happy: MK Stalin
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்ததீர்ப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பேஸ்புக் பதிவில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும்; 27 வருடங்களாக சிறையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.