Symbol allocation for 23 candidates contesting in Perambalur MP election!
பெரம்பலூர் எம்.பி தொகுதியில் போட்டியிடும் 23 வேட்பாளர்களுக்கு சின்னங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது. இதில் பெரம்பலூர் எம்.பி தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் பாஜக, ஐஜேகே, நா.த.க,, பகுஜன் சமாஜ் வாதி உள்பட 46 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 28 ம்தேதி நடந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது திமுக, அதிமுக, பாஜக கூட்டணி ஐஜேகே , நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 23 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. 23 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்படி பெரம்பலூர் எம்.பி தொகுதியில் 23 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அந்த கட்சிக்கான பதிவு செய்யப்பட்ட சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்களின் பட்டியலில் வேட்பாளர்கள் விருப்பத்தின் படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு உதயசூரியன், அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை, பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு தாமரை, நா.த.க., வேட்பாளர் தேன்மொழிக்கு ஒலிவாங்கி சின்னமும், பி.எஸ்.பி வேட்பாளர் இளங்கோவனுக்கு யானை சின்னமும்,
சாமானிய மக்கள் நலக் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கியாஸ் சிலிண்டர் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சுயேட்சை வேட்பாளர்களான அருண் நேரு – டிஸ் ஆண்டெனா, ஆனந்தராஜ்- வெண்டைக்காய், எபிநேசன்- டிவி, சம்பத் – சிதார், அம்மன் ஜி சிவக்குமார்- கம்ப்யூட்டர், சுதாகர்- டைப்ரைட்டிங் மிஷின், தங்கமணி- நெக்லஸ், தமிழ்செல்வன்- கரும்பலகை, பாரி- காலிபிளவர், மணி- பெஞ்ச், மது- பகடை, முத்துக்குமார்- மேஜை, முருகானந்தம்- மட்டைப்பந்து, ரெங்கராஜ்- கப்பல், லெட்சுமணன்- கிராமபோன், வாசுதேவன்- மின்கலவிளக்கு, வீரமலை சுவர்கொக்கி என சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னம் தேர்விற்கு வராமல் இருந்த வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்து வழங்கப்பட்டது.