Symbol fitting work at the voting machine in Perambalur: Election observer Ratna inspection!
பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 50 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 43,705 வாக்காளர்கள் உள்ளனர்.
பொதுவான வாக்குச்சாவடிகள் 12, ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 19, பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 19 என மொத்தம் 50 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 7 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 21 வார்டுகளுக்கு இறுதியாக மொத்தம் 112 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடந்தது.
இப்பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை இயக்குனரும், பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளருமான ரத்னா ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அலுவலர்களிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனைத்தும் முழுமையாக பின்பற்றிட வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெல் நிறுவனப் பொறியாளர்கள் பேட்டரிகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளததா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பாளர்களின் பெயர்கள் அவர்களின் சின்னங்கள் மிகச்சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பணியின் போதும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுருத்தினார்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் பொறியாளர்கள் கண்காணிப்பில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்டு காப்பு அறையில் வைக்கப்படும். அங்கு காவல்துறையினர் மூலம் 24 மணி நேரம் பாதுகாப்பு பணி நடைபெறும். பெரம்பலூர் நகராட்சி கமிஷனர் குமரிமன்னன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.