Talk to civil servants and settle for strike action! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அலுவலகப் பணிகளும், மாணவர்களுக்கு கற்பித்தலும் தடைபட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதற்கான காரணம் ஆகும். இக்கோரிக்கைகள் நியாயமானவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை புதிதாக அறிவிக்கவில்லை. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அப்போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிக்காததால் தான் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யும் முடிவுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இந்தப் போராட்டத்தைக் கூட கடந்த நவம்பர் 27-ஆம் தேதி தொடங்கப்போவதக அரசு ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதற்கு முன்பாக நவம்பர் 16-ஆம் தேதி காவிரி பாசன மாவட்டங்களை கஜா புயல் தாக்கியதால் திசம்பர் 4-ஆம் தேதிக்கு தங்களின் போராட்டத்தை அவர்கள் ஒத்திவைத்தனர். அப்போதும் கூட வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, போராட்டத்தை சில நாட்களுக்கு ஒத்திவைக்க முடியுமா? என்று கேட்டதை ஏற்று முதலில் திசம்பர் 10-ஆம் தேதி வரையிலும், பின்னர் ஜனவரி 7-ஆம் தேதி வரையிலும் போராட்டத்தை அரசு ஊழியர்கள் ஒத்தி வைத்தனர்.

ஆனால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் பலமுறை அவகாசம் கொடுத்தும், அரசுத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதைத் தொடர்ந்து தான் தற்காலிகமாக வேலைநிறுத்தத்தை கைவிடுவதாக உயர்நீதிமன்றத்தில் அளித்திருந்த வாக்குறுதியை கடந்த 7-ஆம் தேதி திரும்பப் பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளது. போராட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டதால் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்தி, இப்போராட்டத்தை அரசு தவிர்க்கச் செய்திருக்கலாம். ஆனால், என்ன காரணத்தினாலோ அதை செய்ய அரசு தவறி விட்டது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது தான். அந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வேண்டியதும் கூட. புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை. பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். அரசு ஊழியர்களின் அடுத்த முக்கியமான கோரிக்கை ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது தான். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழு கடந்த நவம்பர் 27&ஆம் தேதியும், ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட சித்திக் குழு இம்மாதம் 5&ஆம் தேதியும் அறிக்கைகளை தாக்கல் செய்து விட்டன. அவற்றை செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசு அறிவித்திருந்தால் இப்போராட்டம் நடந்திருக்காது. அதைச் செய்யாமல் இச்சிக்கலில் முடிவெடுப்பதை அரசு தள்ளிப்போடுவதன் நோக்கத்தை புரிந்து கொள்ளமுடியவில்லை.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. நிதியாண்டு முடிவடையவுள்ளதால் அரசு அலுவலகங்களிலும் ஏராளமான பணிகள் இருக்கும். இத்தகைய சூழலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் நீடித்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை அரசு அழைத்துப் பேசி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!