Tamil Nadu Farmers Association demands that the ban on small onion export be removed and the price fixed!
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய அரசு வெங்காய ஏற்றுமதியை டிசம்பர் 8 டிசம்பர் 2023 முதல் 31 மார்ச் 2024 வரை தடை விதித்து அறிவிப்பு செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் உள்நாட்டில் கட்டுக்குள் இருப்பதற்காக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதியை தடை செய்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கடந்த 16-8- 2023 அன்று இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு 40 சதவீதம் வரி விதித்து வெங்காய விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை உருவாக்கியது. அதிலிருந்து விவசாயிகள் மீள்வதற்குள் தற்போது வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகிய இரண்டிற்கும் தற்பொழுது ஏற்றுமதி குறியீட்டு எண் ஒரே எண்ணாக இருந்து வருகிறது. இதனால் பெரிய வெங்காயத்திற்கு மத்திய அரசு ஏற்றுமதி தடை விதிக்கப்படும் பொழுதெல்லாம் சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டு விடுகிறது. இதனால் சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ள விவசாயிகள் போதிய விலை இன்றி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய வெங்காயம் இந்தியா முழுவதும் உபயோகப்படுத்துவது போல் இல்லாமல், சின்ன வெங்காயம் தென் மாநிலங்களில் மட்டுமே அதிகம் உபயோகப்படுத்தப்படும் நிலையில், இதனை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பது தேவையற்றது.
எனவே இரண்டு வகையான வெங்காயத்திற்கும் ஒரே ஏற்றுமதி குறியீட்டு எண் என்று தற்பொழுது நடைமுறையில் இருப்பதை பிரித்து சின்ன வெங்காயத்திற்கென தனி ஏற்றுமதி குறியீட்டு எண்ணை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகின்றது.
இதில் பெரிய வெங்காயம் என்பது இந்திய அளவிலான பிரச்சனை. ஆனால் சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது என்பதால் அது தமிழக விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும். சின்ன வெங்காயம் தமிழ்நாட்டிலேயே அதிகபடியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்படுகின்றது மேலும் திருச்சி, அரியலூர்,திண்டுக்கல்,கோவை, திருப்பூர், ஈரோடு, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பயிரிடப்படுகின்றது. தமிழர்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து சின்ன வெங்காயத்திற்கும் ஒவ்வொரு முறையும் தடைகளையும் வரிகளையும் விதித்து தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வறட்சி, நோய் தாக்குதல், போதிய மகசூல் இன்றி பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் உரிய விலை கிடைக்காமல் கடும் பாதிப்படைந்துள்ள நிலையில் மத்திய அரசு தற்போது ஒட்டுமொத்தமாக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும். சின்ன வெங்காயத்திற்கு உற்பத்தி செலவு குறைந்தபட்சம் ஒரு கிலோவிற்கு 30 ரூபாயாக இருந்து வருகிறது. குறைந்தபட்ச லாபத்தோடு 45 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே கட்டுப்படியாக கூடிய சூழ்நிலையில் மத்திய அரசு வெங்காயத்திற்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஏற்கனவே விதிக்கப்பட்ட 40 சதவீத வரியும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையும் சின்ன வெங்காய விவசாயிகளை பெரும் நஷ்டத்தில் தள்ளிவிடும்.
நுகர்வோர்களை மட்டும் மனதில் கொண்டும், தேர்தல் அரசியலை கருத்தில் கொண்டும் விவசாயிகளின் மோசமான நிலையை கண்டு கொள்ளாத மத்திய அரசின் இந்த செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
மத்திய அரசு சின்ன வெங்காய உற்பத்திக்கு எவ்வித மானியமும் அளிப்பதில்லை. விலை நிர்ணயமும் கிடையாது. வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை பேரிடர்கள் மூலம் பாதிக்கப் பட்டு கடுமையான நஷ்டம் அடையும்போது நிவாரணம் வழங்காத அரசு, சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பது, 40 சதவீத ஏற்றுமதி வரி விதிப்பது என்பது மிக மோசமான விவசாய விரோத போக்காகும்.
எனவே மத்திய அரசு சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்குவதோடு, ஏற்றுமதி வரி 40 சதவீதத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கு தனித்தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.